tamilnadu

img

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜன.16 ஆம் தேதிதொடங்கியது. இங்கு தொடக்கம் முதலே கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அப்போது, மூன்றாம் கட்டப்பரிசோதனை முடிவதற்கு முன்பே கோவாக்சின் வந்துவிட்டதால், அந்தத் தடுப்பூசி குறித்துப் பொதுமக்களிடையே தயக்கம் நிலவியது. எனவே, பெரும்பாலானோர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். என்றாலும், விருப்பத்தின் அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 நாள்களுக்கு முன்பு முதல் கட்டமாக 90 பேர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இவர்கள் இரண்டாம் கட்டத் தடுப்பூசி போடுவதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றனர். இவர்களில் 20 பேருக்குமட்டுமே கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இருந்தது. எனவே, ஏறத்தாழ 70 பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால், கோவாக்சினில் முதல் கட்டத் தடுப்பூசி போடுவதும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, கோவிஷீல்டு எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லாமல் போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்டுப்பாடு இல்லை
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் கூறுகையில், ‘’மாவட்டத்தில் கோவாக்சின்அடுத்த இரு நாட்களுக்குத் தேவையான அளவுக்குக் கையிருப்பில் உள்ளது. அடுத்தடுத்துநம் மாவட்டத்துக்கு மாநில அரசு, தடுப்பூசிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. கோவாக்சினைப் பொறுத்தவரை 6,000 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஒரு நாளைக்குச் சராசரியாக 1,500 - 2,000 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனவே தட்டுப்பாடு இல்லை. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான தடுப்பூசிகள், சுகாதாரப் பணிகள் துறை மூலமாக வழங்கப்பட்டு விட்டன. தடுப்பூசி விநியோகத்தில் எந்தவிதத் தேக்கமும் இல்லை. என்றாலும், மாநில அரசிடமிருந்து தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக வருவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்றார்.

;