tamilnadu

பாந்தக்குளம் பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர், ஏப்.2- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட4 ஆவது வார்டு பாந்தக்குளம் பகுதியில், ஆத்தாளூர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகின்றனர். இதற்காகக்குடிமனை வரி செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 40 குடும்பங்களுக்கு மின் இணைப்பு இதுவரைவழங்கப்படவில்லை. இதனால் 30 ஆண்டுகளாக இருளில் வசித்து வரும், இப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கக் கோரி பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை பயனளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி, ஆங்காங்கே டிஜிட்டல் பேனர்கள் வைத்ததோடு, இதனை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர். மேலும் மின் இணைப்பு வழங்குமாறு கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோரிக்கைமனுவும் அளித்தனர். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பொதுமக்கள் தரப்பில் அயூப்கான், நாராயணன், கலாநேசன், ராஜசேகரன், சாதிக்,ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அரசுத் தரப்பில், அனைத்து துறை அதிகாரிகளிடமும் கலந்து ஆலோசித்து ஒரு மாத கால அவகாசத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததின் பேரில் பாந்தக்குளம் மக்கள் கலைந்துசென்றனர்.

;