tamilnadu

img

தஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....

தஞ்சாவூர்:
தஞ்சை பல்லவராட்சிக்கு உட்பட்ட முத்தரையர் தொடங்கி பிற்காலச் சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர் என்று பல்வேறு மரபினர் ஆட்சி செய்த பகுதியாகத் திகழ்ந்தது. ஒவ்வொரு மரபு மன்னரும் அவரவர் காலத்தில் பல்வேறு அறப்பணிகளைச் செய்ததோடு நில்லாமல், அவை பற்றிய செய்திகளை கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பதிவுபெறச் செய்துள்ளனர். அவையே பழைமையான வரலாற்றினை அறிந்து கொள்ளத் துணை நிற்கிறது.

தஞ்சை வடக்கு வீதியில் காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையினரால் இயங்கி வரும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தை சீர்செய்த பொழுது புதையுண்டு கிடந்த ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதுகுறித்து அப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர் வி.பஞ்சாபிகேசன் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், தலைமையாசிரியர் கோ. தில்லை கோவிந்தராஜன், ஆசிரியர் கோ. ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு சென்று அக்கல்வெட்டினை ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பள்ளியின் பின்புறத்தில் கண்டெடுக்கப் பெற்ற கல்வெட்டு தஞ்சை நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாகும். இக்கல்வெட்டு 3.5 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்டதாகத் திகழ்கிறது. இதில் 15 வரிகள் உள்ளன. தஞ்சையில் கி.பி. 1535ஆம் ஆண்டு முதல் கி.பி. 1675ஆம் ஆண்டு வரை 140 ஆண்டுகள் நாயக்கர் ஆட்சி நடைபெற்றது. இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் பல புதிய கோயில்கள் கட்டுதல், பழுதடைந்த கோயில்களை சீரமைத்தல் மற்றும் அவைகளுக்கு அறக்கொடை வழங்குதல் போன்றவை செய்யப் பெற்றன. அந்த வகையில் இன்றைய சீனிவாசபுரம் பகுதிக்கு மேற்கே, மேலவெளி ஊராட்சியில் சிங்கப்பெருமாள் குளம் எனும் இடத்தில் அமைந்திருந்த சிங்கப்பெருமாள் கோவிலுக்கு வழங்கிய கொடை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டில் சங்கு, சக்கர சின்னங்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. வெட்டப்பெற்ற ஆண்டு, மாதம், தானம் அளித்தவர் பெயர் எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை என முனைவர் மணி.மாறன் குழுவினர் தெரிவித்தனர்.
 

;