tamilnadu

img

ரூ. 600 கோடி வரை மெகா மோசடி? பாஜகவைச் சேர்ந்த தொழிலதிபர் தலைமறைவு....

தஞ்சாவூர்:
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், தொழிலதிபர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள். இவர்களுக்கு பூர்விகம்திருவாரூர் மாவட்டம் மறையூராகும். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமதில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிலும் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை வைத்துள்ளதால், “ஹெலிகாப்டர் பிரதர்ஸ்” என்றால் மட்டுமே தெரியும். இதில், கணேஷ் பா.ஜ.க., வர்த்தக அணி பிரிவில்பொறுப்பில் இருந்தார்.  

இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில், முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்து செல்வந்தர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர். இதற்காக முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தனி கமிஷன் கொடுத்து வந்தனர்.இதில் பலரும் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில், கொரோனா காரணத்தை காட்டிய கணேஷ்– சுவாமிநாதன் பிரதர்ஸ், பணத்தை செலுத்தியவர்களிடம் முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், துபாயில் தொழில் செய்து வரும், கும்பகோணம் ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியினர், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர்சஞ்சயிடம் கடந்த வாரம், கணேஷ்– சுவாமிநாதன் சுமார் ரூ. 15 கோடி வரை வாங்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தனர். பைரோஜ்பானு கொடுத்த புகாரில் மாவட்ட குற்றப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், கும்பகோணத்தில், ரூ.600 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதை ஒட்டி யவர்கள் யார் என காவல்துறை தரப்பில் விசாரணை நடந்து வருகிறது.

நீக்கம்
இதனிடையே, பாஜக, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், புதனன்று வெளியிட்ட அறிக்கையில், கணேஷ் மீது சில புகார்கள் வருவதால், அவரை தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.

வழக்குப் பதிவு
தொடர் புகாரை அடுத்து, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் புதன்கிழமை இரவு கணேஷ்– சுவாமிநாதன் நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர்களை பிடித்து விசாரித்தனர். இதில், மேலாளராகப் பணியாற்றும் ஸ்ரீகாந்தன் என்பவரை கைது செய்தனர். மேலும், கணேஷ் வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் கணேஷ்– சுவாமிநாதன், ரகுநாதன், மீரா உள்ளிட்ட நான்கு பேர் மீது 406, 420, 120பி என மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சொகுசு கார்கள்-ஆவணம் பறிமுதல் 
இதனிடையே மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி கணேஷ், சுவாமிநாதன் சகோதரர்களுக்கு சொந்தமான 12 சொகுசுகார்கள், மூட்டை மூட்டையாகஆவணங்கள், மூன்று கம்ப்யூட்டர் ஆகிய வற்றை பறிமுதல் செய்து தஞ்சைக்கு கொண்டு சென்றனர். இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;