tamilnadu

img

தமிழக அரசு தடை விதித்தாலும் ஜன.26ல் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி.....

தஞ்சாவூர்:
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜனவரி 26 அன்று திட்டமிட்டப்படி டிராக்டர் பேரணி தமிழகத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஜன.21, 22 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூரில் நடைபெற்றது. மாநிலத்தலைவர்  வி. சுப்பிரமணியன் கூட்டத்திற்குதலைமை வகித்தார். மாநில பொதுச்செய லாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது:

“மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில், கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தில் இதுவரை 143 விவசாயிகள் இறந்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், குழு அமைத்து கண்காணிக்கவும் அறிவித்து இருப்பதை ஏற்க முடியாது. வேளாண் விரோதச் சட்டத்தை திரும்பப்பெறும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும். தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடுமுழுவதும் 23 ஆம் தேதியன்று அனைத்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி நிச்சயம் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகு திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும். இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என கூறிய நிலையில், தமிழகத்தில் காவல்துறையினர் பேரணிக்கு தடை விதிப்பது கண்டனத்துக்குரியது. 

நேரடி குறைதீர் கூட்டம்
கொரோனாவைக் காரணம் காட்டி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஆன்லைனில் நடத்தும் முறையை அரசு கைவிட்டு, நேரடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அரசு துறை கூட்டங்களை நேரடியாகவும்,  அதிமுக பிரச்சாரக் கூட்டங்களை மக்கள் கூட்டத்துடன் நடத்தும் நிலையில், எதிர்க்கட்சிகள் மீது கொரோனவை காரணம் காட்டி வழக்கு தொடரப்படுகிறது.நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்கனவே விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி மாதத்தில் பெய்த எதிர்பாராத கனமழையால், சுமார் 25 லட்சம்ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, உளுந்து, பயிறு, மணிலா, மக்காச்சோளம், சூரிய காந்தி உள்ளிட்ட பலவகையான பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள்  மீளமுடியாத இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பயிர்கள் சேதம் குறித்து பல மாவட்டங்களில் இன்னும் கணக்கெடுக்கும் பணி துவங்கப்படவே இல்லை. 

பிப். 2ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
அமைச்சர்கள், அதிகாரிகள் பாதிக்கப்பட்டஇடங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறக்கூட  செல்லாதது வன்மையாகக்  கண்டிக்கத் தக்கது. போர்க்கால அடிப்படையில் கணக்கெடுக்கும் பணியை முடித்து அனைத்துபயிர்களுக்கும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். புயல் பாதிப்பிற்கு அரசுஅறிவித்துள்ள நிவாரணத் தொகை மிகவும் குறைவானது. பல இடங்களில் நிவாரணம் முழுமையாகவே வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய குறைகளை களைந்து அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தற்போது மழையால் பாதிக்கப்பட்ட நெல் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரமும், வாழை கரும்பு உள்ளிட்ட  பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 1 லட்சமும் அரசு வழங்க வேண்டும். கூட்டுறவு கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் முறையாக காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சார்பில் வரும் பிப்.2 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

;