tamilnadu

img

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மேற்குவங்க இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்...

தஞ்சாவூர்:
சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, மேற்கு வங்க இளைஞர், சைக்கிள்பயணமாக சனிக்கிழமை தஞ்சாவூருக்கு வந்தார். அவரை காவல்துறையினர் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.

மேற்குவங்க மாநிலம் பலூர்காட் பகுதியை சேர்ந்தவர் மதாய் பவுல்(27). இவர் கடந்த டிசம்பர் 1 ஆம்தேதி, சிலிகுடி பகுதியில் இருந்து சாலைபாதுகாப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

அங்கிருந்து, ஒரிசா, தெலுங்கானா, ஆந்திர மாநிலம் வழியாக தமிழகம் வந்தவர் சென்னை, புதுச்சேரி, வேலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சனிக்கிழமை தஞ்சாவூருக்கு வந்தார். அவரைதஞ்சாவூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாரதிராஜன் தலைமையிலான மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், உதவி ஆய்வாளர் ஜெயந்தி, போக்குவரத்து காவலர் ரமேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மதாய் பவுலை உற்சாகப்படுத்தும் விதமாக, அவருக்கு பயணத்திற்கான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மதாய் பவுல் கூறுகையில், தமிழகத்தில் எனது பயணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சாலை விதிகளை முறையாக பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் செல்வதால், விபத்து நடைபெறுகிறது. குறைந்தது நாள் ஒன்றுக்கு நமது நாட்டில், 400 சாலை விபத்துகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சாலை விதிகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை துவங்கி உள்ளேன். நாளொன்றுக்கு சுமார் 130 கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறேன். இதுவரை 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணத்தை நிறைவு செய்துள்ளேன். தொடர்ந்து தமிழகத்தில் திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநில வழியாக 3 மாதங்களில் என பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்” என்றார். 
 

;