tamilnadu

img

சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்!

சேலம், ஆக.9- சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டதம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவரின் மனைவி வெண்ணிலா ஆக.5 ஆம் தேதியன்று பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஆக.9) குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருப்பதாக தெரிவித்து, பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல வேண்டும் என அடையாளம் தெரியாத ஒரு பெண், குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் குழந்தையை திரும்பி கொண்டு வராததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த பெண், குழந்தையை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர காவல் உதவி ஆணையர் ஹரி சங்கரி தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் தொடர்ந்து குழந்தைகள் திருடப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தனியார் பாதுகாவலர்கள் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. குழந்தைகளை பராமரிக்க அனைத்து நிலை ஊழியர்களும் லஞ்சம் பெறுவதாக வெண்ணிலாவின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, கடத்தப்பட்ட குழந்தையை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.