tamilnadu

img

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் மீது தாக்குதல்.... சிஐடியு சுமைப்பணி மாநில சம்மேளனம் கண்டனம்....

சேலம்:
கடலூரில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளரை தாக்கிய ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சுமைப்பணி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுமைப்பணி சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடபதி, மாநில தலைவர் எஸ்.குணசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கடலூர் டாஸ்மாக் குடோனில் சுமைப்பணிதொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் பணிசெய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக வீரமணி மற்றும் கந்தன் என்ற இருவர் மட்டுமே வெவ்வேறு பெயரில் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்கள். இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே பெட்டி ஒன்றுக்கு ரூ. 1.20 மட்டுமே ஏற்றுக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. 

பலமுறை கூலி உயர்வு கேட்டும், ஒப்பந்ததாரர் வழங்க முன் வரவில்லை. மேலும், இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் அலுவலர்கள், பல முறை அழைப்பு விடுத்தும் ஒப்பந்ததாரர்கள் வந்தபாடில்லை.இந்நிலையில், ஜன.12ஆம் தேதியன்று குறைந்தபட்சம் கூலியாக பெட்டி ஒன்றுக்கு ஒரு ரூ.1.70 பைசா வழங்கக்கோரி ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்கள், போராட்டத்தை ஒடுக்கும் வண்ணம் ஜன.13 ஆம் தேதியன்று குடோனில் வேலை முடித்து வீடு திரும்பிய சுமைப்பணித் தொழிலாளர் என்.முருகன் மற்றும் அவருடைய மகன் எம்.முத்துகிருஷ்ணன் ஆகியஇருவரை அடியாட்கள் வைத்து தாக்கியுள்ளனர். இதில், இருவரும் பலத்த காயமடைந்தநிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய, கொலைவெறி தாக்குதலுக்கு சுமைப்பணி மாநில சம்மேளனம் தனதுவன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு பத்து ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஏற்றுக் கூலியை நியாயமாக உயர்த்தி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;