tamilnadu

img

கோவை காவல்துறைக்கு மாதர் சங்கம் கண்டனம்....

சென்னை:
மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தை மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பெண் போலீஸ் எஸ்பிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். ராஜேஷ் தாஸுக்கு உதவியாகவும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் அதிகாரத்துடனும், தகாத முறையிலும் நடந்துகொண்ட செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணனையும் உடன் கைதுசெய்ய வேண்டும். வழக்கை எடுத்து நடத்துவதற்கு நீதிமன்றம் தாமாக முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் குறிப்பிட்டகால அவகாசம் தீர்மானித்து  குற்றப்பத்திரிக்கை தாக்கல்  செய்து வழக்கை முடித்து தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 2 செவ்வாய்க்கிழமையன்று கோவை எஸ்பி  அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்க  சென்ற போது காவல்துறையினர்  தடுத்து நிறுத்தி மாதர் சங்க பெண்களை இழுத்து தள்ளி மிகவும் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 57 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக களத்தில் நின்று உறுதியோடு போராடி வருகிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, இப்பிரச்சனையில் அமைதி காத்து நிற்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாய் உயர் பதவியில் இருக்கும் சிறப்பு டிஜிபி இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.  இதை எதிர்த்து போராடும் மாதர் சங்கத்தின் பெண்கள் மீது  காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது  கண்டனத்திற்குரியது. மேலும் கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் நினைத்த நேரத்தில்  பொதுக் கூட்டங்கள் நடத்த, மாநாடுகள் நடத்த, நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கொடுத்ததும் ஜனநாயக அமைப்புகள் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரதான முக்கிய பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தினால் வழக்குப் பதிவு செய்வது கருத்துரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் விடப்பட்டு இருக்கக் கூடிய மிகப்பெரிய சவாலாகும். கோவை மாவட்ட காவல் துறை முழுக்க முழுக்க ஆளுகிற அரசின் கைப்பாவையாக மாறி இருப்பது  ஏற்புடையது அல்ல.  உடனடியாக பெண்கள் மீது பதிவு செய்த வழக்கை வாபஸ் பெற வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;