tamilnadu

img

பெண் விவசாயிகள் தினம் .... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற பெண்கள் கைது.....

சென்னை:
வேளாண் விரோத சட்டங்களை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திங்களன்று (ஜன.18) ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற பெண்களை காவல்துறையினர் மறித்து கைது செய்தனர்.

விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். 70க்கும் மேற்பட்டோர் களப் பலியாகி  உள்ளனர்.இந்நிலையில் இது தொடர்பான வழக்கைவிசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. சட்டத்தை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. மேலும், போராட்டக் களத்தில் உள்ள பெண்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளோரில் 42 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர். இருப்பினும், பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்காமல், வீட்டுக்கு செல்ல வேண்டும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளதற்கு மாதர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளன.

இந்நிலையில், தில்லி போராட்டங்களை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாஜன.18ஆம் நாளை பெண் விவசாயிகள் தினமாக அனுசரிக்க அறைகூவல் விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு பெண்கள் அமைப்புகள் இணைந்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நடத்தின.அதன் ஒருபகுதியாக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களை ‘விவசாயிகள்’ என சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும், சம வேலைக்கு சம கூலி என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமிட்டபடி சைதாப்பேட்டை சின்னமலை அருகிலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பெண்கள் சென்றனர்.  அவர்களை ஆண், பெண் காவலர்கள் கயிறுகளை கொண்டு தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில பொதுச் செயலாளர் மஞ்சுளா, மனிதி ஒருங்கிணைப்பாளர் செல்வி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம் பரிமளா, ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் மேரி லில்லிபாய், மகளிர் சட்ட உதவி மையத்தின் எஸ்.மனோன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;