tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான தோழர் வி.பி.சிந்தன்....

தமிழக தொழிலாளி வர்க்கம் விபிசி என அன்போடு, பாசத்தோடு அழைத்த அருமைத் தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் மறைந்து 34 ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை தொழிலாளி வர்க்கத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள், அரும்பணிகள் என்றென்றும் நினைவு கூரத் தக்க அளவில் உள்ளது.விபிசி அபூர்வமான மனிதர். தும்பைப்பூ போன்ற தூய வெண்ணிற ஆடை அவரது வெளித் தோற்றம். அதனினும் தூய்மையானதாக இருந்தது அவரது உள்ளம்.அந்த மாபெரும் தலைவரால் உருவாக்கப்gட்டவர்கள் இன்று இந்திய அரசியல் வானில்ஜொலித்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் பொருளாதாரம்- விஞ்ஞானம் என அனைத்திலும் தனிமுத்திரைப் பதித்தவர் விபிசி.சமூக மாற்றத்திற்காக தொழிலாளி வர்க்கத்தை தயார்படுத்துவதில் பெரிதும் அக்கறை செலுத்தினார். அவர் தலைமையில் நடத்திய எண்ணற்ற போராட்டங்களின் போது இதனை காணலாம்.

போராட்டத்திற்கிடையே அவர் உரையாற்றும் போது, “ தொழிலாளர்களே! உங்கள் போராட்டம் உங்களுக்கு ஊதிய உயர்வு, பஞ்சப்படியை மற்றும் இதர சலுகைகளை பெற்றுத்தரலாம். அதனால் எல்லாம் உனது குறை நீங்காது, திருப்தியான வாழ்க்கை கிட்டாது. ஆட்சி மாற்றம் தேவை, ஆட்சி மாற்றம் என்றால் ஒரு கட்சி போய் இன்னொரு கட்சி அல்ல. தொழிலாளி வர்க்கத்தின் கையில் ஆட்சி மாற்றம்” என்று கூறுவார். பொதுவாக அவரது உரையைக் கேட்டாலே நாடி நரம்புகள் கிளர்ந்தெழும்.
வாலிபர்-மாணவர்-மாதர் அமைப்புகளுக்கு பேருதவியாக திகழ்ந்தார். தொழிற்சங்கத் தலைவராக மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக, மக்கள் தலைவராகவே வாழ்ந்தார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை, களப்பணியில் நேரடியாக பங்கெடுத்ததெல் லாம் இன்றைக்கும் பேசும் பொருளாக உள்ளது.ஏராளமான அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பலரோடு நட்போடு இருந்தார். அவரின் நட்பு தொழிலாளி வர்க்கத்திற்கு, முன்னணி ஊழியர்களுக்கு பெரிதும் உதவி புரிந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.1987 ஆம் ஆண்டு மாஸ்கோ பாரம்பரிய மேதின அணிவகுப்பைப் பார்வையிடவும், இந்திய - சோவியத் தொழிற்சங்கங்களிடையே உறவை மேலும் பலப்படுத்தவும் சிஐடியுவும் இதர சங்கங்களும் ஒரு தூதுக்குழுவை அனுப்ப வேண்டும் என்று சோவியத் தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் சிஐடியு அகில இந்திய மையம் தோழர் வி.பி.சியை மாஸ்கோவிற்கு அனுப்பியது.

மாஸ்கோ சென்ற வி.பி.சி., மேதின அணிவகுப்பைப் பார்வையிட்டார். பிறகு 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச விஞ்ஞானப்பூர்வ சோசலிச மாநாட்டில் ‘அக்டோபர் புரட்சியும், வளர்முக நாடுகளின் மீது அதன்தாக்கமும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். மே 7 ஆம் தேதி வரலாற்று பிரசித்திபெற்ற ஸ்டாலின் கிராடு நகரத்தில் உள்ள யுத்த வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்று பார்வையிட்டார். மே 8 ஆம் தேதியன்று அவருக்குக் கடும் மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றிப் போனது. அன்று இரவு 8 மணிக்கு காலமானார்.அந்த மகத்தான தலைவர் மறைவிற்கு பின் சிஐடியு மாநிலக்குழு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ரத்ததான முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அனுஷ்டித்து வருகிறோம்.சமூக மாற்றத்திற்காக தொழிலாளி வர்க்கத்தை தயார்ப்படுத்துவதே விபிசிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

தொகுப்பு : வி.குமார், மாநில உதவி பொதுச்செயலாளர், சிஐடியு

;