tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : புதுமைப்பித்தன் பிறந்த நாள்....

1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்25 ஆம் நாள் புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதைஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.

இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வையார் மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘‘பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்’’ -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்கமுயன்று தோல்வியுற்றார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார்.
புதுமைப்பித்தன் எழுத்துப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தகவிமர்சனங்கள் என எழுதிக் குவித்தார். அவர்எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவரது முதல் கவிதையானதிரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம், 1934ல் வெளிவந்தது.

புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷலிசகருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல்கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு), கப்சிப் தர்பார்(ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு), ஸ்டாலினுக்குத்தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும்கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை)

பெரணமல்லூர் சேகரன்

;