tamilnadu

img

கொரோனா நோய்த் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்..... மு.க.ஸ்டாலின் அறிக்கை....

சென்னை;
கொரோனா நோய்த் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துக் கொள்கிறேன். கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருக்கிறது. பரவல் என்பது, முதல் அலையை விடக் கூடுதலாக உள்ளது. அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்தத் துயர்மிகு நிலையை மக்கள் அனைவரும் முதலில் உணர வேண்டும். நெறிமுறைகளை மீறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காகப் போடப்படுபவை தான் என்பதை மக்களே உணர்ந்து கொண்டுள்ளார்கள்.  

அரசின் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளாக இல்லாமல் மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் மட்டுமே, நம் பாதுகாப்பை உறுதி செய்திட இயலும்.நோய்ப் பரவாமல் தடுத்தல் - நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரண்டு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் என்பது அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும்.அவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்கவும். அப்படியே வெளியில் வந்தாலும் முகக்கவசம் அணியவும்; மூக்கையும் வாயையும் மூடியிருப்பது போல முகக்கவசம் அணிவது அவசியம். பேசுகிறபோதும் பணியிலிருக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம். குளிர்சாதன அறைக்குள் இருப்பவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பது அவசியம்.  கிருமி நாசினி திரவங்களை அடிக்கடி பயன்படுத்தவும். கபசுரக் குடிநீரை அருந்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் ஏற்படுத்தக் காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;