tamilnadu

img

உறுதியுடன் போராடி பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம்...

சென்னை:
தொலைத் தொடர்பு நிறுவனத்தில் உடனடியாக 4 ஜி சேவையை துவங்க வேண்டும், தொலைத்தொடர்புத்துறை (டி.ஓடி) வழங்க வேண்டிய ரூ. 39 ஆயிரம்  கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொலைத் தொடர்புத்துறை நிறுவன அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய பட்டினிப் போராட்டம் புதன்கிழமையன்று (ஜூலை 28) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தலைமை பொது மேலாளர் வளாகத்தில் அமைப்பாளர் கே.நடராஜன் தலைமையில்  பட்டிப் போராட்டம் நடைபெற்றது. செந்தில்குமார் (ஏஐஜிஇடிஓஏ), வளவனரசு (எஸ்.என்.இ.ஏ), எஸ்.ஆனந்த் (ஏஐபிஎஸ் என் எல் இஏ). பரிமளச் செல்வி (எஸ்.இ.டபில்யுஏ), ரவீந்திரன் (டிஇபியு), பிஎஸ்என்எல் எம்ளாயீஸ் யூனியன் மாநிலப் பொருளாளர் கே.சீனிவாசன், பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர்கள் சங்க மாநிலச் செயலாளர் சி.கே.நரசிம்மன் உள்ளிட்ட பலர் பேசினர்.இந்த போராட்டத்தில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா பேசுகையில், “பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் இல்லை என கூறும் ஒன்றிய அரசு, தொலைத் தொடர்புத்துறை (டிஓடி) வழங்க வேண்டிய 39 ஆயிரம் கோடியை காலம்தாழ்த்தா மல் வழங்கினாலே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணிகளை விரிவாக்கம் செய்ய முடியும்” என்றார்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமுள்ள  7.5லட்சம் கிலோ மீட்டர் தூர ஆப்டிக் பைபர், டவர்களை தனியாருக்கு விற்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.ஏற்கெனவே, மாதமாதம் சம்பளத்தையே முழுமையாக வழங்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்த நிலையில், ரூபாய் 1.75 லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ள வோடாபோன் நிறுவனத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது பிஎஸ்என்எல் ஊழியர்களின் மன நிலையை, உறுதியை சீர்குலைக்கும் முயற்சி. இதற்கு நிர்வாகமும் துணைபோவதை எதிர்த்து உறுதியுடன், வலிமையுடன் போராடி பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம் என்று செல்லப்பா கூறினார்.

;