tamilnadu

img

கிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....

சென்னை:
கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கண்டித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,குடியரசு தினத்தையொட்டி செவ்வாயன்று நடத்த வேண்டிய கிராம சபைக்கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனதுகடுமையான கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. வருடத்தில் நான்கு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். அதில், கிராமத்துக்குத் தேவையான பல்வேறு அடிப்படைத் தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

கிராம சபைக்கூட்டங்களை ரத்து செய்ததற்கு தமிழக அரசு கூறும் காரணம் கிராம சபைக்கூட்டத்தை நடத்தினால் கொரோனா தொற்று பரவும் என்பதாகும்.  இக்காலத்தில் தமிழக அரசால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  உதாரணமாக, அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு அவைகள் நடத்தப்பட்டு வருகின்றன; சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன; ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றன. இதுபோல், மக்கள் அதிக அளவில் கூடும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றபோது, கொரோனாவை காரணம் காட்டி கிராம சபைக்கூட்டங்களை ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும்.

உண்மையில் கிராம சபைக்கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்திருப்பதற்கு காரணம்,கிராம சபை கூட்டம் நடந்தால், கொரோனா கால பிரச்சனைகள் குறித்தும், கொரோனா காலத்தில் கிருமிநாசினி, பிளிச்சிங் பவுடர் உள்பட பொருட்கள் வாங்கியதில்  நடைபெற்ற ஊழல்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவர், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும், கடந்த பல மாதங்களாக எந்தவித வளர்ச்சிப்பணிகளும் நடைபெறாத நிலையில் மக்கள் அது குறித்து கேள்வி எழுப்புவர்.  தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், கிராம சபைக்கூட்டம் நடத்துவது ஆளும்கட்சி விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதாலேயே கிராம சபைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு குடியரசுத் தினத்தன்று கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

;