tamilnadu

img

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இரு சக்கர பேரணி.... வடசென்னையில் வாலிபர் சங்கத்தினர் கைது.....

சென்னை:
விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களை உடனே கைவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வட சென்னை மாவட்டக்குழு சார்பில் ஞாயிறன்று (ஜன.24) தண்டையார்பேட்டை நேதாஜி சிலை அருகில் துவங்க இருந்த இரு சக்கர வாகன பேரணியை இடைமறித்த காவல்துறையினர் வாலிபர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினத்தை யொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  வடசென்னை மாவட்டக்குழு சார்பில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக  இருசக்கரவாகன பேரணி நடத்துவது என திட்டமிடப்பட்டது.
நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், இந்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது, இந்த பேரணிக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறையினர் இடைமறித்து அனைவரையும் கைது செய்தனர். வடசென்னை மாவட்டத் தலைவர் கே.எஸ்.கார்தீஷ் குமார், மாவட்டச் செயலாளர் சரவணன், அ.விஜய், ஆர்.ஸ்டாலின், ஜி.நித்தியராஜ், தேன்மொழி, பகுதி நிர்வாகிகள் விஜயகுமார், டி. பி.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த பேரணியை துவக்கி வைத்த எஸ்.கே. மகேந்திரன், “ கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 60 நாட்களாக தலைநகர் தில்லியில் நடந்து வரும் போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமன்றி மருத்துவர்கள், மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். இதனை வெகு மக்கள் போராட்டமாக மாற்றும் பணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எடுக்கும்” என்றார்.

வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீபா பேசுகையில், “வேளாண் சட்டத்தால் இந்திய ஜனத் தொகையில் 60 விழுக்காடு மக்கள் நேரடியாக பாதிப்புக்கப்பட்டுள்ளனர்” என்றார்.கனடா உள்ளிட்ட மேலை நாடுகள்கூட இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆகவே இந்திய விவசாயிகளுக்கு ஒவ்வாத இந்த வேளாண் சட்டத்தை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

;