tamilnadu

பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இருக்காது: தேர்தல் அதிகாரி

சென்னை, ஏப். 20-அரியலூர் மாவட்டம் பொன் பரப்பியில் தலித் மக்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் அங்கு மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.தேர்தலின்போது தருமபுரி மக்களவைத் தொகுதி வாக்குசாவடிகளில் பாமகவினர் திமுக முகவர்களை விரட்டி அடித்ததோடு வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் செயல்படாமல் முடக்கினர்.மேலும், ஏராளமாக கள்ள ஓட்டு களை பதிவு செய்துள்ளனர். எனவே,அந்த 8 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பிலும் திமுக வேட்பாளர் செந்தில் குமார் தரப்பிலும் புகார் மனு அளித்துள்ளது. இதேபோல் அரியலூர் மாவட் டம் பொன்பரப்பியில் மோதல் ஏற் பட்டதால் அங்கும் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சனிக்கிழமையன்று (ஏப்.20) சென்னையில் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, “தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் மோசடி நடந்ததாக வந்த புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடலூரில் 1, திருவள்ளூரில் 1, தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டுமா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பொது பார்வையாளரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை தில்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், இந்த 10 வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டுமா? இல்லையா? என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்” என்றார்.அரியலூர் மாவட்டம் பொன் பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சனை இல்லை. எனவே, பொன்பரப்பில் மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இருக்காது என்றும் அவர் கூறினார்.


4,690 வழக்குகள்

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் 941, மத்திய மண்டலத்தில் 712, வடக்கு மண்டலத்தில் 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகள் அடிப்படையில் திமுக தரப்பினர் மீது 1, 695 வழக்குகளும், அதிமுக தரப்பினர் மீது 1,453 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

;