tamilnadu

img

ரயில் நிலையங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் நிலைய அதிகாரிகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், பிராந்திய மொழிகளில் பேசக் கூடாது என்றும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தையடுத்து அந்த உத்தரவை தெற்கு ரயில்வே வாபஸ் வாங்கி உள்ளது. 

கடந்த மார்ச் 9ஆம் தேதி மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டதற்கு கட்டுப்பாட்டு அறைகள் இருந்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மொழிப் பிரச்னையே காரணம் என கூறப்பட்டது. இதனை அடுத்து, இரண்டு அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கோட்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், பிராந்திய மொழிகளில் பேசும் போது புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து   தமிழில் பேசக்கூடாது என்று தவறாக அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜெய் தெரிவித்துள்ளார்.