tamilnadu

img

நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் - உயர்நீதிமன்றம்

தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வுக் குழுவுக்கு எதிரான பா.ஜ.க.வின் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில், நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றைத் தமிழக அரசு நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய இந்த குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தமிழக அரசு நியமித்துள்ள இந்த ஆய்வுக்குழு, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல, என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. மேலும், நீதிபதிகள் கூறுகையில், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும். மக்கள் கருத்துக் கேட்பு தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு அமைத்த இந்த குழுவிற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

 

 

 

;