tamilnadu

மூன்று வகையான ஆவின் பால்

பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும், டிலைட் பால், சமன்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால்  ஆகிய மூன்று வகையான பால் வகைகளை முன்னிறுத்தி சந்தைப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை  நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை மாதம்  ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி ரூபாய் அளவில் பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை  விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களின் தேவையை அறிந்து ஆவின் பால் மற்றும்  பால் உபபொருட்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.

இந்நிலையில் பால் மற்றும் பால் உப பொருட்கள் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங் களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா பகுதிகளில் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உப பொருட்கள் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையில் ஆவின் நிறுவனம் மூலம் மூன்று வகையான பால் வகைகளை முன்னிறுத்தி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பசும்பாலில் சராசரியாக 3 விழுக்காடு முதல் 4 விழுக்காடு கொழுப்புச் சத்தும் 7.5  விழுக்காடு முதல் 8.5 விழுக்காடு வரை இதர சத்துக்கள் இருக்கும். இதை அடிப்படை யாகக் கொண்டு 3.5 விழுக்காடு கொழுப்பு  மற்றும் 8.5 விழுக்காடு இதர சத்துக்கள் கொண்ட ஆவின் டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பாலில் வைட்டமின் சி  மற்றும் டி செறிவூட்டப்பட்ட வழங்கப்பட்டு  வருகிறது. இவ்வகை பால் பயன்படுத்து வர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இருக்கும்.

கொழுப்புச் சத்து குறைவான பால் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக  வயதானவர்கள், மருத்துவ ஆலோசனை பெற்று பால் அருந்துபவர்கள், விளையாட்டு  வீரர்கள் போன்றவர்களுக்காக சமன்படுத்தப் பட்ட பால் 3.0 விழுக்காடு கொழுப்பு மற்றும்  8.5 விழுக்காடு இதர சத்துள்ள நீல நிற  பாக்கெட்டுகள் மற்றும் இரு முறை சமன்படுத்தப் பட்ட பால் 1.5 விழுக்காடு கொழுப்பு மற்றும் 8.5 விழுக்காடு இதர சத்துள்ள இளஞ் சிவப்பு பாக்கெட்டுகளில் வழங்கப்படுகிறது

அதிக கொழுப்புச் சத்துள்ள பால் கேட்கும்  வாடிக்கையாளர்களுக்கு நிறை கொழுப்பு பால் 6 விழுக்காடு கொழுப்பு மற்றும் 9 விழுக்காடு இதர சத்துள்ள ஆரஞ்சு நிற பால்  பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே மக்களின் தேவையை கருதியும், மருத்துவ ரீதியாக ஏற்புடைய அளவில் நியாயமான விலைக்கு இவ்வகை பால்  பாக்கெட்டுகள் எந்தவித தங்கு தடையின்றி  வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டை தாரர்களுக்கு டிலைட் பால், சமன்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால் மற்றும் பிற பால் வகைகள் அட்டைகள் மூலம் தேவைப்படும் அளவுக்கு வழங்கப்படும்.