tamilnadu

பணப்பட்டுவாடாவை தடுத்த திமுக செயலாளர் வீட்டில் குண்டு வீச்சு

சென்னை, ஏப். 12-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுகவேட்பாளர் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். பிரச்சாரத்திற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அண்ணாநகர் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு வாக்காளர்களுக்கு பாமக, அமமுக, எஸ்டிபிஐ கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அண்ணாநகர் தொகுதி திமுக செயலாளர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று,பணப் பட்டுவாடாவை தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் அண்ணாநகர் அருகே டி.பி.சத்திரம் தர்மராஜா கோயில் தெருவில் வசிக்கும் திமுக தொகுதி செயலாளர் பரமசிவம் வீட்டின் மீது வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது. இதில் பரமசிவத்தின் கார்முன்பகுதி தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தது.


இதுகுறித்து தகவலறிந்ததும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், எம்எல்ஏக்கள் எம்.கே .மோகன், ப.ரங்கநாதன், ஜே.அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பரமசிவம் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.தனது வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு நடைபெற்றது குறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பரமசிவம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 மோட்டர்பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்,ஹெல்மெட் மற்றும் கர்சீப்பால் முகத்தை மூடிக் கொண்டு வந்து பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியதாவது: அண்ணாநகர் பகுதியில் வியாழக்கிழமை இரவு வாக்காளர்களுக்கு அமமுக, பாமக, எஸ்டிபிஐ கட்சியினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இது ஜனநாயக முறையில் தவறு என திமுகவினர் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அந்த பிரச்சனை வேறு மாதிரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக பகுதி செயலாளர் பரமசிவம் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இப்பகுதியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பாமக கட்சியினர் அதிகளவு தங்கியுள்ளனர். அவர்கள் வெளிப்படையாக பணப் பட்டுவாடாவை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு காவல் துறையினரும் உடந்தையாக உள்ளனர். இதுகுறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிப்போம் என்றார்.

;