tamilnadu

img

"செயல்” அதுவே சிறந்த சொல்லென உணர்த்திய தோழமை

தமிழகத்தின் எல்லைப் பகுதியில் கேரளாவிற்கு அருகில் அமைந்துள்ளது. அய்யன்கொல்லி எனும் அச்சிறு கிராமம். பெரும்பாலும் வனப்பகுதிகளையும், இதர நிலப்பரப்பில் தேயிலை, காபி, மிளகு, ஏலம் உள்ளிட்ட விவசாய நிலங்களையும் உள்ளடக்கிய பகுதி இது. சூரிய ஒளி மறைந்து இருள் பரவத் தொடங்கும் அந்த கணத்திலேயே வீடுகளுக்குள் மக்கள் பெரும்பாலும் முடங்கி விடுவார்கள். ஏனெனில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மிகச் சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் துவங்கிவிடும். யானை தாக்குதலால் நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் இப்பகுதியை சார்ந்தவர்களே. 
கொரோனா பொதுமுடக்க காலத்தில் இப்பகுதியில் பழங்குடியினர் உள்ளிட்ட ஏழை மக்களுக்காக பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் உதவிகளை வழங்குவதற்காக அந்த வீட்டுக்கும் செல்கின்றனர். உண்மையில் அதை வீடு என்று சொல்லிவிட முடியாது. நான்கு புறமும் இரண்டரை அடி செங்கற்களாலான சுவற்றின் மீது கிடைத்த சருகுகளையும், தகரங்களையும் சாத்தி வைத்துக் கொண்டு. அதை வீடென நினைத்து, அதற்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் 68 வயதான பாப்பச்சன் என்பவரும், 62 வயதான அவரது மனைவி லீலாவும். நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் ஒரு தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்த பாப்பச்சனுக்கு கடுமையான ஆஸ்துமா நோய் பாதிக்கபட்ட நிலையில் படுத்த படுக்கையாகி போகிறார். எந்த வேலைக்கும் அவரால் செல்ல முடியாத நிலை. அவரது மனைவி லீலாவோ தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றுகிறார். ஆனால் இந்த பொது முடக்க காலத்தில் 55 வயதுக்கு மேலானவர்கள் அத்திட்டத்தில் பணியாற் விதிக்கப்பட்டுள்ள தடையால் அவராலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. கிடைத்து வந்த கூலியும் இல்லாமல் போகிறது. அவர்களது மூன்று பெண் பிள்ளைகளும் திருமணமாகி சென்று விட்டதால், முதுமையும் ஏழ்மையும் சேர துயரம் தோய்ந்த வாழ்வு அவரகளை சூழ்ந்து கொள்கிறது. உதவிப் பொருட்களை அவர்களிடம் வழங்கிய பின்னர், அவர்களின் நிலையையை உணர்ந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் அங்கேயே ஒரு முடிவு செய்கின்றனர். அந்த வீட்டை மறு நிர்மாணம் செய்வதற்கான திட்டம் உருவாகிறது. பொருட்கள் சேகரிப்பதற்கும், நிதியை திரட்டுவதற்குமான ஆலோசனைகள் விரைவாக செயல் வடிவம் பெறுகின்றன. அப்பகுதியின் கட்சி உறுப்பினர்களின் முன்முயற்சியோடும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.யோஹண்ணன் மற்றும் ஒய்வுபெற்ற ஆசிரியர் அச்சுதன் மாஸ்டர் ஆகியோர் ஒருங்கிணைப்பிலும் உதவிகள் கோரப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள ”RED ARMY” எனும் சமூக வலைத்தளக்குழுவிலும் தோழர்கள் செய்திகளை பகிர்கின்றனர். புதியதொரு வீட்டை கட்டுவதற்கான உதவிகள் நிதியாகவும், பொருட்களாகவும் கிடைக்கின்றன. மூன்றே மாதங்களில் ரூபாய் ஆறரை லட்சத்தில் புதியதொரு வீட்டைக் கட்டி அதற்கு “அன்பு இல்லம்” என பெயர் வைத்து ஏழைத் தொழிலாளர்களான பாப்பச்சன். லீலா தம்பதியினரிடம் ஒப்படைத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.
அய்யன்கொல்லி கிராமம் உள்ளிட்ட பல கிராமங்கள் அமைந்திருக்கும் சேரங்கோடு ஊராட்சிதான் தமிழகத்திலேயே மிகப்பெரியது. சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட இவ்வூராட்சியின் தலைவராகத்தான் மறைந்த தோழர். பெ.தமிழ்மணி அவர்கள் பணியாற்றினார். தற்போது சேரங்கோடு ஊராட்சி பகுதியில் உள்ள மாவட்ட கவுன்சிலர் வார்டிலும், இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டுகளிலும், நான்கு ஊராட்சி வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது. அதே மக்களோடு எல்லா நேரங்களிலும் இணைந்து நிற்பது எனும் தோழர்களின் அணுகுமுறையால் தான் இத்தகைய தேர்தல் வெற்றிகளும் கூட சாத்தியமாகின்றன. இந்த வார்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினரான எம்.எம்.ஹனீபா மாஸ்டரும், ஒன்றிய கவுன்சிலர்களும் இந்த வீட்டை புதுப்பிப்பதற்கான பணிகளில் தோழர்களோடு இணைந்து நின்றார்கள். ஏற்கனவே ஒரு முறை எற்பட்ட கடுமையான வெள்ளச் சேதங்களால், இவ்வூராட்சிக்குட்பட்ட சேரம்பாடி கண்ணன்வயல் பகுதியில் ஆறு பழங்குடி மக்களின் வீடுகள் முற்றாக இடிந்த போது, எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினரின் உதவியோடு அவற்றை முழுமையாக புணரமைத்தும் அளித்திருக்கிறார்கள் இப்பகுதி தோழர்கள். எளிய  மக்களின் கோரிக்கைகளுக்காக போராடுவது, கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது ஆகிய பணிகளோடு கட்சியும் தனது பங்கிற்கு உதவிக்கரம் நீட்டுவது எனும் பன்முகத் தன்மையோடு இயங்கும் தோழர்களால், இத்தகைய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கிடைக்கின்றன. சமூகத்தை நேசிக்கிற தோழமையை விட இவ்வுலகில் சிறப்பானது என வேறெதுவும் இருக்க முடியுமா.
திறப்புவிழா
“அன்பு இல்லம்” என்கிற பெயரில் தோழமைகளால் கட்டியெழுப்பப்பட்ட இந்த வீட்டின் திறப்பு விழா செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் எருமாடு கமிட்டி செயலாளர் கே.ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், அச்சுதன் மாஸ்டர், சுப்பிரமணியன் ஆகியோர் வீட்டின் சாவியை பாப்பச்சன் குடும்பத்தாரிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஹனீபா மாஸ்டர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அமீது மாஸ்டர், வர்க்கீஸ், ஏ.சாந்தா, ஒன்றிய கவுன்சிலர்கள் கே.யசோதா, ஜி.ஜி.ஜோண், ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ், இடைகமிட்டி உறுப்பினர்கள் பிலிப், பாபு, ராமதாஸ், உஸ்மான், கிளைச் செயலாளர் வேலாயுதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
கே.ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்
சிபிஐ (எம்) நீலகிரி மாவட்டம்
 

;