tamilnadu

img

நெல் கொள்முதல் நிலையங்களில் குழு ஆய்வு

நெல் கொள்முதல் நிலையங்களில் குழு ஆய்வு

கடலூர், அக்.28 – கடலூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு குடிநீர், அமர்வதற்கான நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய தால் தமிழகத்தில் அறுவடை செய்த நெல் பாதிப்படைந்தது. 17% இருக்கும் நெல்லின் ஈரப்பதத்தை 22% உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, ஒன்றிய அரசு மூன்று குழுக்களை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. மத்திய குழுவை சேர்ந்த பிரீத்தி, பிரியா பட், அனுப்பமா, அருண் பிரசாத் மற்றும் தமிழக அரசு சார்பில் உமா மகேஸ்வரி ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் தூக்கணாம்பாக்கம் மற்றும் குண்டியமல்லூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். கொள்முதல் நிலை யங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து விவசாயிகளிடம் விசாரித்தனர். நனைந்த நெல்லை மாதிரிக்காக சேகரித்தனர். நெல் காய வைப்பதற்கு போதுமான இடம் இல்லை, கடந்த சில நாட்களாக போதிய வெயில் இல்லாததால் நெற்பயிர்கள் தொடர்ந்து பாதிப்படைந்தன என விவசாயிகள் தெரிவித்தனர். கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர். இதனைக் கேட்ட மத்திய குழுவினர், விவசாயிகளுக்கு குடிநீர், அமர்வதற்கான நாற்காலிகள், மழையில் ஒதுங்குவதற்கான கூடாரங்கள் போன்றவற்றை கொள்முதல் நேரத்தில் தற்காலிகமாக அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.