tamilnadu

img

தமுஎகச திரைப்பட, கலை இலக்கிய விருதுகள் அறிவிப்பு.....

சென்னை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்  திரைப்பட,கலை இலக்கிய விருதுகள் குறித்து அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:  

புதுக்கோட்டையில் சங்கத்தின் மாநிலச்செயற்குழுக் கூட்டம் ஜனவரி 31 அன்று நடைபெற்றது.   2019ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் டூலெட், கே.டி.என்கிற கருப்பு துரை, அசுரன் ஆகிய படங்களுக்கும், மாறுபட்ட புதிய முயற்சிக்கான விருதினை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்திற்கும் வழங்குவது  என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டிற்கான, தோழர் மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண் படைப்பாளுமை விருதிற்கு எழுத்தாளர் பாமா, அமரர் மு.சி.கருப்பையா பாரதி – ஆனந்த சரஸ்வதியம்மாள் நாட்டுப்புறக் கலைச்சுடர் விருதிற்கு நெல்லை தங்கராஜ், ப.திருவுடையான் நினைவு நாடகச்சுடர் விருதிற்கு  மு.ராமசாமி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  2019, 2020 விருதுகள் வழங்கும் விழா மாநிலக்குழுக் கூட்டத்துடன் சேர்ந்து தேனி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில்  நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை தமிழக அமைச்சரவையின் முடிவு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும். அரசியல் காரணங்களுக்காக நாடெங்குமுள்ள சிறைகளில் விசாரணையின்றி  ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி போராடிவரும் விவசாயிகளுக்கு தனது ஒருமைப்பாட்டை  தெரிவித்துக்கொள்ளும் தமுஎகச செயற்குழு, அச்சட்டங்களை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது. பீமா கோரேகான் வழக்கில் இட்டுக்கட்டி சேர்க்கப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை மனிதவுரிமைப் பிரிவு உள்ளிட்ட  அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை இந்திய அரசு உதாசீனப்படுத்துவதை ஏற்கமுடியாது. இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.  பொதுமுடக்கத் தளர்வு பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுவரும் நிலையில் பொது நூலகங்கள் இன்னமும் முழுமையாக செயல்படாமல் உள்ளன. நூலகச்செயல்பாட்டை இயல்புநிலைக்குத் திருப்பிட தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;