tamilnadu

img

தமிழக சட்டமன்றம் கூடியது 223 எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு.....

சென்னை:
தமிழக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்எல்ஏக்களில் 223 பேர் செவ்வாயன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முடிவுரை எழுதியது.125 தொகுதிகளில் திராவிட முன்னேற்ற கழகமும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 8 தொகுதிகளிலும் என மொத்தம் 133 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் தலா 4 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகள் என ஒட்டுமொத்தமாக இக்கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக கடந்த 7 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பேரவையின் தற்காலிக  தலைவராக கு.பிச்சாண்டி ஆளுநர்  மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார்.இந்தநிலையில், 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில்  செவ்வாயன்று (மே 11 ) காலை 10 மணிக்கு கூடியது.

பதவிப் பிரமாணம்...
தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெற்றிச் சான்றிதழை பேரவை செயலாளர் சீனிவாசனிடம் ஒப்படைத்து சட்டமன்றஉறுப்பினர்களாக உறுதிமொழி எடுத்துக் கொண்டு கையொப்பமிட்டனர்.முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள்பேரவை தலைவர், துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும்அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு அகர வரிசைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

10 பேர் ஆப்சென்ட்...
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தொடரில் அனைத்து கட்சிகளும் சார்ந்த 223 உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.கொரோனா வைரஸ் பாதிப்பால்தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கரன்,மதி வேந்தன் ஆகியோர் அவைக்கு வரவில்லை. திமுக சார்பில் வெற்றி பெற்ற காந்திராஜன், சண்முகையா, வரலட்சுமி, வெங்கடாசலம் ஆகியோரும் பதவியேற்கவில்லை.அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர்  ராஜு, வைத்தியலிங்கம், இசக்கி சுப்பையா ஆகியோரும் பதவி ஏற்கவில்லை.

பேரவைத்தலைவர் தேர்தல்
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாமல் பதவி ஏற்காத சட்டமன்றஉறுப்பினர்கள்  12ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள லாம் என்று தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நாளை (புதன்) நடைபெறும் என்றும் பிச்சாண்டி அறிவித்தார்.

பாதுகாப்பு வளையத்தில் கலைவாணர் அரங்கம்...
கொரோனா பரவல் காரணமாக தலைமை செயலகத்தில் உள்ள புனிதஜார்ஜ் கோட்டை கூட்ட அரங்கில்பேரவைக் கூட்டம் நடத்தப்படவில் லை. கடந்த அதிமுக ஆட்சியின்போதும் கலைவாணர் அரங்கத்தில் தான்சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது.16-வது சட்டப்பேரவையின் முதல்கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கிலேயே தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் 3-வது மாடியில் தனிமனித இடைவெளியுடன் இருக்கை கள் போடப்பட்டு இருந்தன.
கூட்டத்தொடரை அடுத்து கலைவாணர் அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அரங்க வளாகம் முழுவதும் கொரோனா தடுப்பு, மேற்கொள்ளப்பட்டு இருந்தன.அடையாள அட்டை இருந்தவர்கள் தவிர வேறு யாரையும் போலீசார் உள்ளே அனுமதி க்கவில்லை. கலைவாணர் அரங்கத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முகக் கவசம்...
கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவருமே முகக்கவசம் அணிந்துகலந்துகொண்டனர். இதேபோல் பத்திரிகையாளர்கள் அனைவரும் முகக் கவசத்துடன் பங்கேற்றனர்.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றியும் விவாதிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

********************

மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப இணைந்து நிற்போம்....   முதல்வர் ஸ்டாலின்

கட்சி பாகுபாடின்றி எம்எல்ஏ.,க்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து, இயல்பு வாழ்க்கை திரும்பிட இணைந்து நிற்போம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளதாவது: 

16வது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட எம்எல்ஏ.,க்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கொரோனா தொற்றுப் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணி. நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் போர்க்கால அடிப்படையில் செயலாற்றி வருகிறது. அரசு அதிகாரிகள், முன்களப் பணியாளர்கள், போலீசார் என பல தரப்பினரும் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர். சமூக நல ஆர்வலர்களும், தொழில் நிறுவனத்தாரும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவிக்கரம் அளித்து வருகிறார்கள்.

வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாக களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.எனவே எம்எல்ஏ.,க்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  அரசு உடனடி நடவடிக்கையினை, உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்ப நாம் அனைவரும் இணைந்து நிற்போம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;