tamilnadu

img

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது...

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவை திங்களன்று (ஜூன் 21) கூடுகிறது.  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில்  ஜூன் 21 திங்களன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. உரை முடிந்ததும் பேரவை ஒத்தி வைக்கப்படுகிறது. பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. அதிகபட்சம் நான்கு நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசி முடித்ததும் இறுதி நாள் கூட்டத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றுகிறார்.மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, மேகதாது அணை விவகாரம், அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என தெரிகிறது.

கொரோனா காலமாக உள்ளதால் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அலுவலக ஊழியர்கள் ,அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நெகட்டிவ் முடிவுகள் வந்தவர்கள் மட்டுமே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

;