tamilnadu

img

பாஜக அரசின் பாரபட்ச அணுகுமுறையால் தமிழ்நாட்டிற்கு மேலும் பாதிப்பு... கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு....

சென்னை:
ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறையால் தமிழகம் மேலும்பாதிக்கப்பட்டுள்ளது என்று  மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: 

8 மாதங்களுக்கு மேலாக போராடிவருகிற விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலிக்க மறுக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தனக்கு வேண்டாதவர்கள், அவர்களது கட்சியில் இருப்பவர்களின் செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் மோசமான நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் நடவடிக்கை. இது தொடர்பாக நாடாளு மன்றக்குழு விசாரிக்க அனுமதி மறுக்கிறது.பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அவற்றின் வரிகளை குறைக்க ஒன்றிய  அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து வருகிறது. புதிய கல்விக்கொள்கையை திணித்துள்ளது. வரலாற்று பாடங்களைதிருத்தி இந்திய வரலாற்றை இந்துத்துவா வரலாறாக மாற்றமுயற்சிக்கிறது.மனித, ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ‘உபா’ போன்ற சட்டங்களை நிறைவேற்றி ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துகிறது. பிணையில் வர முடியாத வகையில் கைது செய்யப்பட்ட ஸ்டான்ஸ்வாமி சிறையிலேயே இறந்தார். அவரது மரணம் ஒரு நிறுவன படுகொலை.

கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், இந்துத்துவா கொள்கைகளை அமலாக்க வேண்டும், எதேச்சதிகார நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்ற வகையில் ஒன்றிய அரசு செயல்படு கிறது. இதனை எதிர்த்து தனியாகவும், ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களோடு இணைந்தும் இயக்கம் நடத்துவது குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்.திமுக ஆட்சி பதவியேற்றது முதல் மக்கள் வரவேற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதேசமயம், மாநி
லத்திற்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் தமிழக அரசு மருந்து உற்பத்தி செய்துகொள்ள அனுமதி தர மறுக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுக்கிறது. ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறையால் தமிழகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் மாநிலக்குழுவில் விவாதிக்கஉள்ளோம்.விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு பிறந்த நாள் விழா தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் அதை கொண்டாடுவது குறித்தும், ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டுள்ள ஆர்.உமாநாத், ஏ.நல்லசிவன் நூற்றாண்டு விழாக்களை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் விவாதிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல்
செய்தியாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த  கே.பாலகிருஷ்ணன், “ 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை, திமுகவுடன் உடன்பாடு கண்டு போட்டியிடுவதற்கு முயற்சிப்போம். அந்த நிலைமை தொடரும்” என்றார்.

;