tamilnadu

img

காவல்துறை கண்ணியமாக செயல்பட தமிழக அரசு வழிவகை காண வேண்டும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்....

சென்னை:
காவல்துறை கண்ணியமாக செயல்பட தமிழக அரசு வழிவகை காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சேலம் மாவட்டத்தில் பாப்பா நாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் வியாபாரி முருகேசனையும், அவரது  நண்பர்களையும் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் முருகேசன் படுகாய மடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.  ஒரு சாதாரண ஏழை வியாபாரியை சோதனைச்சாவடியில் சோதனை என்கிற பெயரில் அடித்து கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் முதலமைச்சர்  தலையிட்டு முருகேசன் கொலைக்கு காரணமான சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்திருப்பதும், முருகேசன் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கியிருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கை யாகும். 

கடந்த காலங்களில் அரசின் இத்தகைய தலையீடு இல்லாத காரணத்தால் காவல்துறை சில இடங்களில் கட்டுப்பாடு இல்லாமல் வரம்புமீறி செயல்படும் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன. இதன் விளைவாக ஏற்கனவே காவல்நிலைய சாவுகள், அத்துமீறல்கள் தொடர்கதையாகி வந்துள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சமூக விரோத சக்திகள், போதை கடத்தல் வியாபாரிகள், பாலியல் குற்றவாளிகள், தீண்டாமை கொடுமை செய்வோர் போன்றவர்கள் மீது காவல்துறையினர் மென்மையாக நடந்து கொள்வதும், சாதாரண பொதுமக்களிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதுமான காவல்துறையின் அணுகு முறையில் மாற்றம் உருவாக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் ‘பயிற்சி’ காரணமாக மனிதநேயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு காவல்துறையின் முகத்தோற்றமே மாறிப்போயுள்ளது என்பதை கவனப்படுத்துகிறோம்.தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, காவல்துறையினரின் செயல்பாடு, அணுகுமுறை குறித்தும், மக்களிடம் நேசமாக நடந்து கொள்வதற்கான உரிய பயிற்சிகளை காவலர்களுக்கு அளித்திடவேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் காவல் ஆணையத்தின் சிபாரிசுகள் முறையாக கடைப்பிடித்திட தேவையான அனைத்தை யும் மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.  எதிர்வரும் காலங்களில் சாதாரண மக்களிடமோ - விசாரணைக் கைதிகளிடமோ காவல்துறை மிக கண்ணியமாக நடந்து கொள்ள உரியபயிற்சி அளித்திட நடவடிக்கை எடுத்திடவேண்டும்.மாறிவரும் காலச்சூழலை கருத்தில் கொண்டு காவல்துறை உயர் அதிகாரிகளும் - உரியமாற்றங்களை காவல்துறை யில் ஏற்படுத்தி - ‘மக்களின் நண்பனாக’ காவல்துறை செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சிகள் இல்லாத செய்தி தொகுப்பு... 3-ஆம் பக்க தொடர்ச்சி சேர்த்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளது...   

;