tamilnadu

img

கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகளை சமாளித்திட உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்க! தமிழக அரசுக்கு - சிபிஐ (எம்) வலியுறுத்தல்

சென்னை:
கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகளை சமாளித்திட உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாகமேற்கொள்ள வேண்டும் என்று   மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று இரண்டாவது அலை மிகக் கடுமையான பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் போதுமான முன்தயாரிப்பும்,திட்டமிடலும் இல்லாததால் மருத்துவ மனைகளில் அனுமதிப்பதற்காக நோயாளிகள் ஆம்புலன்சிலேயே மணிக்கணக்காக காக்க வைத்திருக்கும் நிலையும், படுக்கைகள் போதாத நிலையும், இறந்தவர்களை எரியூட்டுவதற்குக் கூட மயானங்களில் காத்திருக்கும் நிலைமையையும் கூடபார்க்க முடிகிறது. இத்தகைய நிலைமைகளை தவிர்த்திட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும்.

போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் தேவைமுதல் அலையை விட தற்போது மிக அதிகமான எண்ணிக்கையிலும், தொடர்ச்சியாகவும் நோயாளிகள் மருத்துவமனை களுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். நோயாளிகளை பரிசோதிப்பது, உரிய வார்டுகளில் அனுமதிப்பது, தீவிர சிகிச்சையளிப்பது, ஆக்சிஜன் அளிப்பது ஆகியவற்றிற்கு பயிற்சிபெற்ற திறமையான போதுமான மருத்துவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் தேவைப்படுகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை 24 மணி நேரமும் கவனம் செலுத்தி சிகிச்சையை கண்காணிப்பதற்கு உரிய பயிற்சி பெற்ற செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள். வயது முதிர்ந்தோர், இதர நோய்களோடு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்கொரோனா அல்லாத நோய்களுக்காக தீவிர சிகிச்சைக்கு வருவோர்களுக்கு உரிய கவனிப்பு ஆகியவற்றை உத்தரவாதப்படுத்த கூடுதலான மருத்துவர்களும், செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள்.

எக்ஸ் ரே, சி.டி. ஸ்கேன், ஆர்.டி.பி.சி.ஆர். உள்ளிட்ட கொரோனா பரிசோதனைகளுக்காக  தொழில்நுட்பத்தில் பயிற்சிபெற்றவர்கள் போதுமான அளவிற்கு இருந்தால் மட்டுமே நோயாளிகள் காத்திருக்கும் நேரமும், ஒரே இடத்தில் குழுமியிருப்பதையும் தவிர்க்க முடியும். இதேபோன்று மருத்துவமனைகளில் சுத்தம் செய்வதற்கும், கிருமி நாசினிகள் தெளிப்பதற்கும் போதுமான தூய்மைப் பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள்.

புதிய மருத்துவ முகாம்களை ஏற்படுத்திடுக!

முதல் அலையை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மிகத் திறமையாக கையாண்டார்கள் என்பது உண்மையே. ஆனால், இரண்டாவது அலை ஓராண்டு காலம்தொடர்ச்சியாக பணியிலிருந்த நிலையிலும், மிக வேகமாகவும், மிக அதிகஎண்ணிக்கையிலும் வருவதை கவனத்தில்கொண்டு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரை
உடனடியாக போதுமான எண்ணிக்கை யில் நியமிக்க உரிய நடவடிக்கையை தலைமைச் செயலாளர் மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ முகாம்களை உருவாக்கிடவேண்டும். இப்போதே இதற்கான தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே நிலைமைகளை சமாளிக்க முடியும்.நிலைமை கை மீறி போன பிறகு தேவையானவர்களை நியமிப்பதை விட முன்கூட்டியே உரிய தயாரிப்புகளுடன் இவற்றைச் செய்வது பாதிப்புகளையும், மரணங்களையும் குறைப்பதற்கு உதவும் என்பதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

;