tamilnadu

img

ஒட்டநந்தல் தலித் மக்கள் மீதான பொய்வழக்கை திரும்பப்பெறுக... வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக... தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்...

சென்னை:
ஒட்டநந்தல் கிராம  தலித் மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும். சட்டத்தின்படி செயல்பட விடாமல்  காவல்நிலையத்தில் திரண்ட வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் ஒட்டநந்தல் கிராமத்தில் அம்மன் கோவிலில் வழக்கமாக கூழ் ஊத்தும் திருவிழா நடத்த வேண்டிய தேதி வந்துள்ளது.ஊரடங்கு காரணமாக விழா நடைபெறவில்லை.ஆனால் தலித் மக்கள் தங்கள் பகுதியில் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.தகவல் அறிந்த காவல்துறை உரிய நேரத்தில் தலையிட்டு விழாவை  நிறுத்திவிட்டது. அவர்களும் தங்களுடைய தவறை உணர்ந்து விழாவை நடத்தவில்லை.இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதியன்று ஒட்டநந்தல் கிராமத்தின் சாதியவாதிகள் தலித் பெரியவர்களை காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர்.  சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்த பின்னணியில் சாதியவாதிகள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் காலில் விழுந்த ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீது சாதியவாதிகள் கொடுத்த பொய் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது ஏற்புடையதல்ல.

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு காவல்துறை யின் இத்தகைய அணுகுமுறையும் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. சட்டத்தின்படி தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் மீது நடவடிக்கை   எடுக்க வேண்டிய காவல்துறை, சாதியவாதிகள் தரும் பொய்ப்புகார்களைப்  பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகிறது.அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்கிற  ஊக்கத்தை அளிப்பதற்கு மாறாக தலித் மக்களுக்கு மனச்சோர்வை காவல்துறையே ஏற்படுத்திவிடுகிறது.இதன் காரணமாகவும் வன்கொடுமைகள் செய்கிற சாதியவாதிகள் மேலும் மேலும் மூர்க்கத்துடன் வன்கொடுமைகளில் ஈடுபடுகிறார்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில் காவல்துறையின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களை சட்டத்தின்படி உயரதிகாரிகள் சந்திப்பதை புதிய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவாக கும்பல் திரண்டு காவல்நிலை யத்தை முற்றுகை இடுகிற வன்முறைக் கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என்று கோருவதோடு ஒட்டநந்தல் கிராம தலித் மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்.சட்டத்தின் படி செயல்படவிடாமல்  காவல்நிலையத்தில் திரண்ட வன்முறையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;