tamilnadu

img

தெற்கு ரயில்வேக்கு ‘சில்வர்’விருது!

சென்னை, ஜன.17-
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதற்காக ‘ஸ்காச்’ என்ற தனியார் நிறுவனம் வெள்ளி விருதை தெற்கு ரயில்வேக்கு அளித்துள்ளது.
‘ஸ்காச்’ என்ற தனியார் நிறுவனம், ஆலோசனை, ஊடகம், பொதுத்தொண்டு ஆகிய துறைகளில் செயலாற்றி வருகிறது. இந்நிறுவனம் 2003ஆம் ஆண்டிலிருந்து பொது மக்கள் 
சேவையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ‘மகளிர் திட்டம்’ என்ற பெயரில் இயங்கி வந்த சுய உதவி குழுவிற்கு குழந்தைகள் பாதுகாப்பிற்காக விருது வழங்கி கௌரவித்தது. மேலும் கட்டுமானம், நிதி, வங்கி, தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் சிறந்த செயல்பாடுகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தெற்கு ரயில்வேக்கு ஸ்காச் நிறுவனத்தின் ‘வெள்ளி’ விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தொழிலாளர் சிறப்பு ரயில்களை இயக்கியது, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சிறப்பு பார்சல் ரயில்கள் மூலமாக கொண்டு சேர்த்தது, ரயில் பெட்டிகளை சிகிச்சை மையமாக மாற்றியது, தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை சொந்தமாக தயாரித்தது ஆகியவற்றைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே மருத்துவ குழு விலை மதிப்பில்லாத உயிர்களைக் காப்பாற்றியதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் பொதுமக்கள் புகார்களையும், ஆலோசனைகளையும் ரயில்வேக்கு தெரிவிக்க செயல்பட்டு வந்த “ரயில் மதாத்” செயலி ஸ்காச் நிறுவனத்தின் தங்க விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

;