tamilnadu

img

பாலியல் குற்றவாளிகள் தப்பிடாமல் தண்டனை பெற்றுத் தரவேண்டும்... தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்...

சென்னை:
பாலியல் புகாரில் கைதாகும் குற்றவாளிகளை தப்பிவிடாமல் தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.  

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனரும், தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று  சொல்லிக்கொள்பவருமான சிவசங்கர் (பாபா) தன் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்கிற புகாரின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். அண்மைக்காலத்தில் பத்மசேஷாத்ரி பள்ளி உள்பட பல பள்ளிகளில் இருந்து வெளிவரும் இத்தகைய குற்றங்கள், பள்ளிகளில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை வெளிக் கொண்டு வருகிறது. இது பெற்றோர்களை மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய நிர்வாகத்தின் ஒரு பெரும்புள்ளி, பாதுகாவலர் என்ற இடத்தில் இருந்துகொண்டே இதனை செய்கிறார் என்பது தீவிரமான குற்றமாகக் கருதப்பட வேண்டும். 2013 சட்டத்தின்படி நிறுவனம் எடுக்கவேண்டிய 9 தடுப்புநடவடிக்கைகளில் ஒன்றைக்கூட இப்பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை. பள்ளியின் நிறுவனரே குற்றவாளிக்கூண்டில் நிற்கும் சூழலில் அப்பள்ளியின் நிர்வாகத்தை அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
பிணையில் வெளிவர அனுமதிக்கக்கூடாது

பள்ளியின் அதிகாரப் படிநிலையின் உச்சியில் இருக்கும் சிவசங்கர், தண்டனையிலிருந்து தப்புவதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார். இவர் வெளியே இருப்பது வழக்கை சீர்குலைக்கவே உதவும். பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துவது, விலைக்கு வாங்க முயற்சிப்பது, விசாரணை அதிகாரிகளை தன் வசமாக்க முயற்சிப்பது, ஊடகங்களைப் பயன்படுத்தி தவறான செய்திகளை வெளியிடுவது என்று பல வகைகளிலும் அவரது நடவடிக்கைகள் இருக்கக்கூடும். புகார் வந்தபின் இவர் மேற்கொண்ட தலைமறைவு வாழ்க்கையே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே அவர் பிணையில் வெளிவராமல் இருப்பதற்கு அரசுத் தரப்பும் காவல்துறையும் வலுவான முயற்சிகளை மேற்கொள்வதோடு, குறிப்பிட்ட கால வரையறைக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவழக்கு விரைந்து முடிக்கப்படு வதற்கான  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கல்வி நிலையங்களிலும், அனைத்து  பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் புகார் கமிட்டி அமைக்கப்படுவதை மாநில அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

விரிந்ததளத்தில் விவாதித்து...
தனியார் நடத்தும் சர்வதேச பள்ளிகள் துவங்கி அரசு நடத்தும் கிராமப்புற பள்ளிகள் வரை பல்வேறு இடங்களில் இக்கொடுமைகள் தொடர்கின்றன. கடந்த ஆட்சியின்  போது பள்ளிக்கல்வித்துறை, குற்றங்கள் நடந்த பிறகும் கூட  தலையிடுவதில் மிகுந்த மெத்தனப் போக்கு காட்டியது  என்பதும், நடக்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தது என்பதும் கடும் விமர்சனங்களாக முன் வைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் பெற்றோர், ஆசிரியர், மாணவர் பெண்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என ஒரு விரிந்த தளத்தில் விவாதித்து தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசும் எடுத்திட முன்வரவேண்டும்.துணிச்சலாக புகார் கொடுக்க முன்வந்த மாணவிகளையும் ஆதரவாக நின்ற குடும்பத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுவதோடு அவர்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இத்தகைய குற்றங்களை எதிர்த்து போராட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

;