tamilnadu

img

பேனர்களை முழுமையாகத் தடுக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்  

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாகத் தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விழுப்புரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வின் திருமணத்திற்கு வந்திருந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக்கம்பம், பேனர்களை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 12 வயது சிறுவன்  மின்சாரம் தாக்கி  உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே பேனர் கலாச்சாரத்தைத் தொடர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்றும், பேனர்கள் வைக்கப்படும் நிகழ்ச்சிகளுக்குத் தான் செல்வதில்லை என அறிவித்துள்ளார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள் பேனர்கள் வைப்பதை முழுமையாகத் தடுக்கும்வகையில் விதிகள் வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதுடன், இந்த வழக்கு தொடர்பாக திமுக மற்றும் தமிழக அரசு ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

;