tamilnadu

img

சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது... சிபிஐ இரங்கல்....

தமிழக அரசியல் வானில் 60 ஆண்டுகளைக் கடந்து ஒளிவீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது என்று தோழர் த.பாண்டியன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. 

சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல்வளமும், நாவன்மையும் கொண்டவர். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளில் பரந்த வாசிப்புக் கொண்டவர். இடையறாது படிப்பதும், படித்ததை சுவைகுன்றாமல் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைப்பதும் அவருக்கு இயல்பாக கைவந்தது.

பேசுவது போன்றே, ஈர்க்கும் எழுத்துவன்மை கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஜனசக்தியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். ஜனசக்தியில் ‘சவுக்கடி’, ‘கடைசிப் பக்கம்’ ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் தீப்பறக்கும் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் அதனால் தாக்குதலுக்கு உள்ளபவர்கள் கூட தேடிப்படிக்கும் அளவு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியவை. ஜனசக்தியின் ஆசிரியராக இறுதி மூச்சுவரை அவர் பணியாற்றியுள்ளார்.கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய போது, கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான ‘பாலன் இல்லத்’துக்கு சென்னை, தி.நகரில் எட்டு அடுக்குகள் கொண்ட கம்பீரமான கட்டிடத்தை பல பிரச்சனைகளுக்கு இடையே கட்டி எழுப்பியது அவரது மறக்க முடியாத வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும்.

இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் குரூரமான தாக்குதலுக்கு ஆளானபோது பயனுள்ள எதிர்வினை ஆற்றியவர். தமிழகத்தில் பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து காலத்தில் அவர் எடுத்த முயற்சியால், சிங்கள எதிர்ப்பு தமிழர் பாதுகாப்புச் செயல்பாடு மீண்டும் சூடு பிடித்தது.தமிழகத்தில் பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியலை முன்னலைப்படுத்துவது, சமூக நீதி ஆகியவற்றுக்காக நேர்கோடாக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. மதவெறி, வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என அண்மையில் மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூர்மையான எதிர்ப்பாளரான அவர், போருக்கு எதிரான, உலக மக்களிடையே ஒப்புறவுக்கான இயக்கங்களை நடத்தி தலைமை தாங்கியவர்.இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மத பிளவுகளை விரிவுப்படுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தை சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மதிப்புமிக்க, இணையற்ற தலைவரை இழந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

;