tamilnadu

img

நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்.....

சென்னை:
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.12) சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் பதிவாளர் அலுவலகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும், ஒரே துறையின் கீழ் பொது விநியோகத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்கள் தொடர்  போராட்டம் நடத்தி வந்தனர்.இதன் காரணமாக 2018ம் ஆண்டு ஊதிய சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த பரிந்துரைகளை, நிதி சம்பந்தப்பட்டது, நிதி சம்பந்தப்படாதது என உத்தரவுகள் பிறப்பித்தும் டப்பில் போடப்பட்டது.

2020 அக்டோபர் மாதம் ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நவம்பர் மாதம் ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அரசுக்கு டிசம்பர் மாதம் 24ந் தேதி அறிக்கை அளித்தது. அதன்படி ஊதிய உயர்வை அரசு அறிவிக்காமல் உள்ளது.அவ்வப்போது ஊடகங்களை சந்திக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர், விரைவில் முதலமைச்சர் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறி வருகிறார். அதன்படி ஊதிய உயர்வு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக் கடை அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் இந்த காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து வட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பதிவாளர் சுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர், தொழிலாளர்களிடையே பேசிய தலைவர்கள், “ஒரு வார காலத்தில் ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிடப்படும் என்று பதிவாளர் உறுதி அளித்துள்ளார். அதன்படி அரசாணை வெளியிடாவிடில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்கும் அன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்” என்று அறித்தனர்.தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்சங்க மாநிலத் தலைவர் ஆ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர்அ.சவுந்தரராசன், தொமுச பொருளாளர் கி.நடராஜன், மாநிலச் செயலாளர் பொன்னுராம், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஜீவா, நியாய விலைக் கடை பணியாளர் சங்கத் தலைவர் ஜி.ராஜேந்திரன், பொதுவிநியோக ஊழியர் சங்க  தலை வர் டி.பால்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

;