tamilnadu

img

ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு: உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை 

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது. 
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக  தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலையா? எனக் கேள்வி எழுப்பினார். ஐபிஎஸ் அதிகாரிக்கே புகார் தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்? மேலும், இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணியளவில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணை குறித்த விவரங்களை காவல்துறையினர் மதியம் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தனர். இந்த புகார் மீதான விசாரணை அதிகாரியாக முத்தரசி எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிபதி ராஜேஷ்தாஸ் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளார். ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்களை தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


 

;