tamilnadu

img

ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதா? தமிழக இளைஞர்களுக்கு அதிமுக அரசின் துரோகம்....

சென்னை:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநில செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் வேலையின்மை மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவருகிறது. கடந்த டிசம்பர் 2020 இறுதியில் வேலையின்மை விகிதம் 9.15 சதவீதமாகும். இதுவரை வரலாற்றில் இல்லாத உயர்ந்தபட்ச அளவாகும். மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்துவரும் நவீன தாராளமய கொள்கைகள் வேலையின்மை பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது. மோசமான முறையில் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும், திட்டமிடாத முறையில் அவசர அவசரமாக அமலாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி காரணமாகவும் நாட்டில் பெரும்பகுதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பலகோடிப் பேர் வேலையிழந்தனர். 

தமிழகத்தில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக என்று சொல்லி மத்திய, மாநிலஅரசுகளால் அமலாக்கப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கால் பல லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல கோடிப் பேர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இருக்கிற வேலை வாய்ப்புகளையும் பறிக்கிற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. 

தமிழகத்தில் சுமார் ஒரு கோடிபேர் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். பலர் பதிவு செய்யாத நிலையிலும்கூட ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானவர்கள் படிப்பை முடித்து வெளிவருகின்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு துறைகளில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம்நடத்தி வருகின்றன. ஆனால், தமிழக அரசுஇப்பணியிடங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அவுட் சோர்சிங், ஒப்பந்த ஊழியர்,தற்காலிக ஊழியர் என்ற அடிப்படையிலேயே புதிய நியமனங்களை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களை நவீனகொத்தடிமைகளாக்கும் நியமனங்களை கைவிட்டு காலமுறை ஊதிய அடிப்படையில் நிரந்தரமாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது.

தற்போது மத்திய அரசின் ரயில்வே, என்எல்சி, தபால் உள்ளிட்ட அனைத்து பணிநியமனங்களிலும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு உள்ளது. அதனை தட்டி கேட்க திராணியற்ற அரசாக அதிமுக ஆட்சி உள்ளது. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு வேலை தருவோம் என்றுசொல்லி விட்டு பத்தாண்டு கழித்து இருக்கிற வேலை வாய்ப்பையும் அழிக்கக்கூடிய வேலையை செய்து வருகிறது. இத்துடன் நிர்வாகத் திறனற்ற அரசால், தமிழகத்தின் கடன் கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.4.65 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது நிதிநிலை என்பது மோசமான விளைவுகளை உருவாக்குகிறது.இத்தகைய சூழலில், தமிழக அரசு கொரோனா நெருக்கடியை காரணம் சொல்லி 58 ஆக இருந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியது. தமிழக அரசின் இத்தகைய இளைஞர் விரோத நடவடிக்கையை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கும் மற்றொரு துரோக நடவடிக்கை என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருதுகிறது.தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் இத்தகைய மோசமான முயற்சிகளை அதிமுக அரசு கைவிட வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை ஏற்கனவே இருந்த அடிப்படையில் 58 ஆக தீர்மானிக்க வேண்டும்.

;