tamilnadu

img

அமைப்புசாரா தொழிலாளர்கள்-நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிடுக... ஆட்டோவில் பயணம் செய்ய இ-பதிவு முறையை ரத்து செய்க... முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....

சென்னை:
ஆட்டோவில் பயணம் செய்ய இ-பதிவு முறையினை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு  ரூ. 4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூன் 16 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தை மோசமாக பாதித்தது. தங்களின் தலைமையிலான அரசு பதவியேற்றுக் கொண்டவுடன் தாங்கள்மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால் படிப்படியாக நோய்த் தொற்றும், உயிரிழப்புகளும் தற்போது வெகுவாக குறைந்துள்ளன. கொரோனா நோய்த் தொற்றை தடுக்கவும், மருத்துவ கட்டமைப்பு, சிகிச்சை, ஆக்சிஜன் வசதி போன்றவற்றில் தங்களின்தலைமையிலான அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக இரண்டு   தவணைகளாக ரூ. 4 ஆயிரம் மற்றும்14 பொருட்கள் அடங்கிய இலவச  மளிகைத் தொகுப்பு வழங்கி வருவது பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் பேருதவியாக அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இருப்பினும் ஆட்டோ, கட்டுமானம், தையல், மீன்பிடி, சுமைப்பணி, சாலையோர வியாபாரம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள்  ஆகியோர் ஊரடங்கினால் முற்றாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேற்கண்டதொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்கு ஆட்டோ பயணம்அத்தியாவசியமாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆட்டோ பயணத்திற்கு அனுமதிக்கப்பட்ட போதும் இ-பாஸ் எடுக்கவேண்டுமென கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. இதனால், ஆட்டோ பயன்பாடு பெருமளவு தடைபட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின்  நலனை கருத்தில் கொண்டு ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு என்ற முறையினை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

கொரோனா பேரிடரால் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாட்டுப்புற மற்றும் மேடைக் கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து அக்குடும்பங்கள் தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் கிராமப்புற ஏழைகளாக உள்ளனர் என்பது அறிந்ததே. கொரோனா தொற்று மூன்றாவது அலை ஏற்படும்என்ற அச்சம் கலந்த சூழ்நிலையில் அடுத்த பல  மாதங்களுக்கும் கோவில் திருவிழாக்கள், நாடகங்கள் அனைத்தும் நடத்துவதற்கான வாய்ப்பற்ற நிலையே நீடித்துக் கொண்டுள்ளது.  எனவே, தமிழகஅரசு கோவில்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம்- நிவாரணம் வழங்கியது போல, இந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கும் குறைந்தபட்சமாக  ரூ. 4 ஆயிரம் நிவாரணம் வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

கட்டுமானம், ஆட்டோ, அமைப்புசாரா, முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்வதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் குறைந்தபட்ச தொகையாக  ரூ.4 ஆயிரம்  நிவாரணம் வழங்கிட வேண்டும். இத்தொகையினை நலவாரியங்களின் நிதியிலிருந்தே அளித்திட வாய்ப்புள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.வாகனங்களுக்கு எப்.சி. எடுக்கும் காலம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் காலம் உள்ளிட்ட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகப் பணிகளுக்கும் 2021 டிசம்பர் வரை கால நீட்டிப்பு செய்வதோடு, ஈஎம்ஐ செலுத்துவதற்கான காலத்தையும் 2021 டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவைத் தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்திட தாங்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;