tamilnadu

img

கிராம வங்கிகளை தனியார்மயமாக்காமல் பாதுகாத்திடுக... அரசியல் கட்சித் தலைவர்களிடம் வங்கி ஊழியர்கள் கோரிக்கை....

சென்னை:
கிராம வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது. அதனை பலப்படுத்தி பாதுகாத்திட குரல் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கிராம வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

தற்போதுள்ள 43 கிராம வங்கிகளை லாபத்தின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தி அவற்றை தனியார்மயப்படுத்தவும் ஒன்றிய அரசின் பங்குகளை அந்தந்த ஸ்பான்சர் வங்கிகளுக்கே கொடுத்துவிடுவது எனவும் ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. கிராம வங்கிகளின் சேவை 90 சதவீதத்திற்கும் மேலாக கிராமப்புற மக்களுக்கே சென்றடைந்துள்ளது. முன்னுரிமைக் கடன் என்பது 90 சதவீதம் வரை கிராம வங்கிகள் மூலமாக கிராம மக்களுக்குச் சென்றடைகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடித்துவிடும் என்றும் எனவே மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது, அரசு வங்கிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் வராக்கடன்களை கறாராக வசூலிக்க வேண்டும். கிராம வங்கிகளுக்கு போதுமானநிதி மூலதனத்தை அரசே அளிக்க வேண்டும். தேசிய கிராம வங்கி ஏற்படுத்தப்பட வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் இந்திய வங்கிஊழியர்  சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்கம், தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கத்தின் முன்னணி தலைவர்கள் ஆகியோர்  அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை  சந்தித்தனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,எம்.செல்வராஜ் எம்.பி., திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ்  மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி,விஜய் வசந்த் எம்.பி., மற்றும் அதிமுக, பாஜக தலைவர்களிடமும் கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து  பேசுவதாகவும்ஆவன செய்வதாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடுதலைவர் தி.தமிழரசு, பொதுச்செயலாளர் என்.ராஜகோபால் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

;