tamilnadu

img

ஊரடங்கு காலத்தில் ஆட்டோ தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக..... தமிழக அரசுக்கு சிஐடியு வேண்டுகோள்.....

சென்னை:
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மே 10 லிருந்து மே 24 வரை முழு ஊரடங்கு என்பது அறிவிக்கப்பட்டு,  ஆட்டோக்கள் இயக்கவும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  இரண்டாவது அலை மிக வேகமாக பரவி மதிப்பு மிக்க உயிர்கள்அன்றாடம் பறிபோவது மிகுந்த வேதனை அளிக்கிறது.  இதனை ஓரளவு தடுக்க முழு ஊரடங்கு பயன்படும் என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கருதுகிறது.

அதே நேரத்தில் சாலையில் ஆட்டோக்களின் சக்கரம் சுழன்றால் தான், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை சக்கரம் உருளும் என்பதை கவனத்தில் கொண்டு ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்  (சிஐடியு) வின் மாநிலதலைவர் வி.குமார், மாநில பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கு பிறப்பித்த காலங்களில் பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஆட்டோ தொழில் என்பது முற்றாக பாதிக்கப்பட்டு,  முடங்கிய தொழிலாக மாறியுள்ளது. 2020 மார்ச் 24 ல் துவங்கிய பாதிப்பு இன்றுவரை சீரடையவில்லை. இக்காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் வாழமுடியாத நிலைமை ஏற்பட்டு, தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளது.கொரோனாவிற்கு முன் - கொரோனாவிற்கு பின் என்று வாழ்க்கை முறையில் கடுமையான சவால்களை, நெருக்கடிகளை சந்திக்கும் காலமாக மாறியுள்ளது.கடந்த ஆட்சியில் ஆட்டோ தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாதம் ரூபாய் 7,500 வீதம் ஆறுமாத காலத்திற்கு நிவாரணம் தாருங்கள் என கோரிக்கை வைத்து பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். நலவாரி யத்தில் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டும் ரூபாய் 2000 தருவதாக அறிவித்து வழங்கினார்கள்.

தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களில் சுமார் 10% க்கும் குறைவான  ஆட்டோ தொழிலாளர்களே நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம்பெற்ற அனைத்து ஆட்டோ தொழிலாளர் களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இக்கோரிக்கை கடைசிவரை பரிசீலிக்கப்படவேயில்லை. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பணிசெய்வது என்று முடிவு செய்தோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில் புதிய ஆட்டோக்கள் வாங்க மானியமாகரூபாய் 10,000 வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இது மேலும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.இதன் விளைவு தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்கு ஆட்டோ தொழிலாளர்களும் பணிசெய்தார்கள். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றுள்ளார். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்சம்மேளனம்(சிஐடியு) சார்பில் புதிய அரசுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.கடும் நெருக்கடியான சூழலில் பொறுப்பேற்றுள்ள அரசானது, கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க இரண்டு வார காலம்முழு ஊரடங்கை அறிவித்ததோடு, ஆட்டோக் கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூபாய் 7,500 கொரோனா நிவாரணமாக வங்கிடநடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.வாகனங்களுக்கு எப்.சி.எடுக்கும் காலம்,  ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் காலம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 2021 டிசம்பர் வரை கால நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டுகிறோம்.மேலும் அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஆட்டோ வாங்குவதற்காக பெற்ற கடனுக்கான இ.எம்.ஐ தொகையை செலுத்த ஓராண்டு காலம் கால நீட்டிப்பு செய்திட வேண்டுகிறோம். இக்காலத்திற்கு உரிய வட்டியை முழுமையாக ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இக்காலத்தில் முரட்டுத்தனமான அடக்குமுறையை ஏவி, முழுமையான இன்சூரன்ஸ் பிரிமியத்தை வசூல் செய்கின்றன. இதனை தடுத்து நிறுத்தி ஓராண்டு காலத்திற்கு காலநீடிப்பு செய்திட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலே கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

;