tamilnadu

img

பூம்புகார் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும்.... சுற்றுலாத் தலங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கை.. சுற்றுலா தொழிலாளர்களின் வருவாயை அதிகரிக்க வல்லுனர் குழு....

 சென்னை:
“பண்டைய தமிழர்களின் தொன்மை நகரத்துக்கான அடையாளங்களை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா தலமான பூம்புகாரை கடந்த பத்தாண்டு கால  அதிமுக அரசு சீரழித்தது குறித்த செய்திக் கட்டுரை புகைப்படங்களுடன் ஜூன் 6ஆம் தேதி தீக்கதிரில் வெளியானது.

இந்தப் பின்னணியில், சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலைமை அலுவலகத்தில் வியாழனன்று ஜூன் 10 வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து துறையின் அமைச்சர்மா.மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.“அப்போது சோழர்களின் முக்கிய துறைமுக நகரமான பூம்புகாரில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தினை உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்” என்றும்அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தீக்கதிர் செய்தி எதிரொலியாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், வரலாற்றுச் சான்றுகளை சுற்றுலாப்பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிலப்பதிகார கலைக்கூடம், செயற்கை நீரூற்று,  கடற்கரையோரம் ஒரே கல் தூணில் வடிவமைக்கப்பட்டிருக்கும் நெடுங்கால் மண்டபம், கோவலன்- கண்ணகி நுழைவுவாயில், கண்ணகி சிலை, சிறுவர் பூங்கா என அனைத்தும் பொலிவு பெறும். மேலும் கடற்கரை நகரமாக அழகுபடுத்தப் படும்.

சீரொளி சீர்மிகு காட்சி...
கன்னியாகுமரியில் தமிழர்களின் பாரம்பரிய முக்கிய அடையாளமாக திகழ்ந்துவரும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இரவிலும் திருவள்ளுவர் சிலையை  கண்டு களிக்கும் வகையில் சீரொளி சீர்மிகு காட்சி அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

வல்லுநர் குழு...
தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 18 மாதங்களாக வைரஸ்தொற்றின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாகசுற்றுலாவை வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் தங்களது வருவாயை பெரும்பாலும் இழந்துள் ளனர்.வரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு, நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்வோரின் வருவாயை அதிகரிக்கவும் முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று ‘வல்லுனர் குழு’ அமைப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னணி மாநிலம்...
தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு, வருவாய், அந்நியச் செலாவணி ஈட்டுதலில் மண்டலவாரியான வளர்ச்சி, ஆசிய பொருளாதார மேம்பாட்டிற்கு சுற்றுலா துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கன்னியாகுமரி மற்றும் அழகிய மலை வாழ்விடமான உதகை உள்ளிட்ட இதரசுற்றுலா தலங்களை கண்டுகளிக்க உலகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர்.எனவே சுற்றுலா தலங்களுக்கு வருகை புரியும் பயணிகளின் வசதிக்காக அணுகு சாலைகள், உடை மாற்றும் அறைகள், வாகனநிறுத்துமிடங்கள், குடிநீர், வழிகாட்டும் பலகைகள், மின்விளக்குகள், சாலை போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மாமல்லபுரம்...
ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகம் மாமல்லபுரத்தை சுற்றுலா தலமாக தேர்வு செய்துள்ளது. இங்கு உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.447 கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.மேலும் ராமேஸ்வரம் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை சுற்றுலா கண்ணோட்டத்தில் மேம்படுத்த ரூ. 40 கோடி செலவில் முதற்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் ஓட்டல்களின் வசதிகள் குறித்தும் தூய்மை பணிகள் குறித்தும் உணவு குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலைத் துறை முதன்மைச் செயலாளர்  பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;