tamilnadu

img

விறுவிறுப்பாக நடந்த பிளஸ் 1 மாணவர் சேர்க்கை... மருத்துவ, வணிகவியல் பிரிவுக்கு கடும் போட்டி....

சென்னை:
கொரோனா தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் திங்களன்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. 

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர். 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில், மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. சென்னையில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும்அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள்.விரும்பிய பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பதாலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததாலும் விறுவிறுப்பாக சேர்க்கை நடைபெற்றது.சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த குடும்பத்தினர் அரசு, மாநகராட்சி பள்ளிகளை நாடுகிறார்கள்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், ‘‘அனைத்து வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும். 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன் பிற ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வர வேண்டும்.கொரோனா தொற்று குறைந்த பிறகு, 11 மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை விவரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தனியார் பள்ளிகள் 75விழுக்காடு மட்டுமே கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறினார். 

;