tamilnadu

img

பெட்ரோல்-டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து மக்களுக்கு துரோகமிழைக்கும் மோடி அரசு.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்....

சென்னை:
பெட்ரோல்-டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து, மக்களுக்குதுரோகமிழைக்கும் மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இணையவழியில் ஜூன் 11 அன்றுமாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநிலசெயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் உயர்த்தப் பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இவற்றின் விலை உயர்வால் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. இத்தகைய கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களின் நிலையை குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதோடு, தொடர்ச்சியாக துரோகமிழைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.மே மாதம் 2 ம் தேதி தேர்தல் முடிவுஅறிவிக்கப்பட்டபின்பு, மே 5 ஆம்தேதியிலிருந்து இன்று வரையிலும் பதினேழு முறை தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைஉயர்த்தப்பட்டுள்ளது.  தமிழகம்  உட்பட  பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ விடவும் அதிகரித்துள்ளது. இதே போலடீசல் விலையும் ஓரிரு நாளில் ரூ.100அதிகரிக்கும் நிலை உருவாகியுள் ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இதர அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் அடிப்படையான காரணமாக அமையும் என்பதால், மத்திய அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகளும், மக்களும் விடுக்கும் கோரிக்கைகளை பாஜக அரசுகண்டு கொண்டதாக தெரியவில்லை. ஏற்கனவே கொரோனாநோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தலையில் விழுகிற மற்றுமொரு பேரிடியாகவே பெட்ரோல்-டீசல் விலைஉயர்வும் உள்ளது. எனவே இத்தகைய இக்கட்டான தருணத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் அரசு, உடனடியாக தலையிட்டு பெட்ரோல்-டீசல் விலைகளை குறைத்திட ஆக் கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

                                         **************

செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிடுக!

செங்கல்பட்டில் உள்ள `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான முறையில், அந் நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு பத்து
நாட்களுக்கு மேலாகியும், மோடி அரசு இது குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் மவுனம் சாதிக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறையால் ஒட்டு மொத்த தேசமும் அவதிப்படும் நெருக்கடியான இச்சூழலிலும், மத்திய அரசு இது குறித்த முடிவை அறிவிக்காமல் இருப்பது சரியானதல்ல.எனவே தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, இந்நிறுவனத்தில் தமிழக அரசு தடுப்பூசிதயாரிப்பதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிடமுன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

                                         **************

தேநீர் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்: சிபிஎம்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இத்துடன் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் பரவலாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிலைமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு அவ்வப்போது ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்படுகின்றன.சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ள தளர்வுகளில் தொற்றுக் குறைவாக உள்ள 27  மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் தேநீர் கடைகளுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை. உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்தேநீர் கடைகளுக்கு அனுமதி மறுப்பு எனும்முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்வதோடு, இதர கடைகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேநீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
மேலும் தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வந்தாலும் கூட நெருக்கடி இன்னமும் நீடிக்கும் நிலையில் மதுபான கடைகளை திறப்பது எனும் முடிவு மீண்டும் நோய்த்தொற்று அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்து விடக் கூடாது. எனவே தமிழக அரசு எடுத்துள்ள இம்முடிவை மறு பரிசீலனை செய்து, மதுக்கடைகளை திறக்கும் முடிவை தற்போதைய நிலையில் கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;