tamilnadu

ஊழல் புகாரில் சிக்கியவருக்கு புதிய பதவி: வெளுத்தது பாஜக சாயம்... கே.எஸ்.அழகிரி விமர்சனம்....

சென்னை:
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராகேஷ் அஸ்தானாவுக்குத் தொடர்ந்து பதவி கொடுத்துக் காப்பாற்றி வரும் பாஜக அரசின் சாயம் மீண்டும் வெளுத் திருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது, அப்போதைய சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மா நடவடிக்கை எடுத்துவிடாமல் தடுக்க பல வழிகளை மோடி அரசு கையாண்டதை நாடு அறியும். ஒன்றிய அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில், அலோக் வர்மாவையும் ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய நாடகம் அரங்கேறியது.ரபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்ததால்தான் அலோக் வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக, மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

அதன் பின்னர், மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். கட்டாய விடுப்பில் அனுப்பிய ஒன்றிய அரசின் நடவடிக்கை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மீண்டும் சிபிஐ இயக்குநர் பதவியில் அலோக் வர்மா அமர்ந்தார்.அதன்பிறகு, அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. அவர் மீதான குற்றச்சாட்டு எதையும் விசாரிக்காமல், சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்கி, ஜனநாயகப் படுகொலையை மோடி அரங்கேற்றினார்.அதே சமயம், கட்டாய விடுப்பில் அனுப் பப்பட்ட சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பதவியை மோடி அரசு வழங்கியது.2018ஆம் ஆண்டு மொயின் குரேஷி ஊழல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சனா சதீஷ், இடைத்தரகர்கள் மூலம் ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.2.95 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குஜராத்தின் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக அந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட டைரியிலிருந்து தெரியவந்தது. இதுபோல, ராகேஷ் அஸ்தானா மீது அடுக்கடுக்கான பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.1984ஆம் ஆண்டு குஜராத்தில் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்தானா, 2002ஆம் ஆண்டு கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்து போன்ற சில முக்கிய வழக்குகளை விசாரித்தவர். தங்களுக்கு நெருக்க 
மானவர் என்ற ஒரே காரணத்துக்காக ராகேஷ் அஸ்தானாவுக்கு பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர்.உச்சகட்ட நிகழ்வாக, வரும் 31ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்த ராகேஷ் அஸ்தானாவை, தில்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நியமித்துள்ளது. இதன் மூலம், தாங்கள் ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள் என்பதைப் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் மீண்டும் வெளிப் படுத்தியுள்ளனர்.பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு, தொடர்ந்து பதவி கொடுத்துக் காப்பாற்றி வரும் மோடி தலைமையிலான பாஜக அரசின் சாயம் இதன் மூலம்மீண்டும் வெளுத்திருக்கிறது. நேர்மையான அதிகாரியான அலோக் வர்மாவைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையைப் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷாவும் இழந்து விட்டார்கள்.இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

;