tamilnadu

img

தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டே துரோகமிழைக்கும் மோடி-எடப்பாடி.... கே. பாலகிருஷ்ணன் சாடல்

சென்னை:
தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டே தமிழர்களுக்கு வஞ்சகமும் துரோகமும் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில்பங்கேற்றார். பல்வேறு நலத்திட்டங் களை துவக்கி வைத்து உரையாற்றிய அவர், தனது பேச்சின் ஊடாக அவ்வையாரின் வரிகளையும், மகாகவி பாரதியின் கவிதையையும் துணைக்கு அழைத்துக் கொண்டதோடு மட்டுமின்றி, தமிழகத்தின் கலாச்சாரத்தை பாதுகாப்பதும், கொண்டாடுவதும் நமக்கு பெருமை அளிக்கும் விசயமாகும் என்றும் தமிழகத்தின் கலாச்சாரம் உலக அளவில் புகழ்பெற்றது  என்றும்திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டார்.

636 கிலோமீட்டர் தூர கல்லணை கால்வாய்க்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை மெட்ரோ ரயில்திட்டத்தின் முதல் கட்டத்தில் மேலும் 9கி.மீ. தூரப்பிரிவை துவக்குதல், விழுப்புரம்,தஞ்சாவூர், திருவாரூர் மின்மயமாக் கல் திட்டம், சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகம் ஆகிய திட்டங்களை துவக்கி வைப்பதாக அறிவித்த பிரதமர்,தமிழகத்தில் ஒரு பகுதி தலித் மக்களை - அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சில குறிப்பிட்ட சமூகமக்களை தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் திருத்தம் செய்ய அரசியல் சாசனத்தை திருத்துவதற்கான வரைவு அரசாணைக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதப்பட்டுக் கொண்டார்.

பிரதமரின் இந்த திட்டங்கள் குறித்தும் அவரது உரை குறித்தும் கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “சென்னைவிழாவில் பிரதமர் நரேந்திர மோடிதிரும்பத் திரும்ப தமிழ் கலாச்சாரத்தை யும் தமிழர் நாகரிகத்தையும் பெருமிதமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வையாரையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டி உரையாற்றி நாடகம் நடத்தியிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கின்ற ஆட்சியே மோடியின் ஆட்சி. தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான பணிகளில் தமிழகத்து இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வடமாநிலங்களின் இளைஞர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் இந்தியும், சமஸ்கிருதமும் திணிக்கப்பட்டு வருகின்றன” என விமர்சித்தார்.  மேலும் அவர் கூறியதாவது:

அவ்வையாரின் புகழ்பெற்ற வரிகளான, “வரப்புயர நீர் உயரும்...” என்ற பாடலை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அதில் “குடி உயர கோல் உயரும்; கோல் உயர கோன் உயர்வான்’’ என்று அவ்வையார் கூறியிருப்பதை, இந்திய நாட்டு குடிமக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் காலில் போட்டு மிதித்து,நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மாண்புகளையும் நலன்களையும் அழித்துக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சியை நடத்தும் மோடி பெருமிதத்தோடு கூறியிருப்பது அவமானகரமானது. 

அதேபோல கல்லணை கால்வாய் திட்டம் என்று கூறி அடிக்கல் நாட்டியிருக்கிறார். கல்லணை சோழர்காலத்தில் கட்டப்பட்ட மிகப்பிரம்மாண்டமான - பொறியியல்நுட்பத்திற்கு அடையாளமான - அணை அதில் இப்போது இவர்கள் பழைய மதகுகளை இடித்துவிட்டு புதிதாக மதகுகளை அமைக்கப்போகிறார்கள். சில இடங்களில் தூர்வாரப்போகிறார்கள். இத்தகைய ஒரு திட்டத்தை பிரதமரே நேரில்வந்து அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கவேண்டிய அளவிற்கு என்ன அவசியம்இருக்கிறது. இது ஒன்றும் புதிய திட்டம்அல்ல. இதை துவக்கி வைத்து விட்டு,ஏதோ ஒரு அளப்பரிய திட்டத்தை தமிழக மக்களுக்கு அளித்துவிட்டதைப் போல புளங்காகிதம் அடைந்து பிரதமர் பேசியிருக்கிறார். இதற்காகமுதலமைச்சரும் பிரதமரை தில்லி யிலிருந்து அழைத்துவந்திருக்கிறார். 

திட்டங்களை துவக்கி வைப்பதற்காக தமிழகத்திற்கு பிரதமர் வந்தாரா?அல்லது அவர்களது கூட்டணியில் இருக்கிற முரண்பாடுகளையும் உரசல்களையும் பேசி சரிசெய்வதற்காக வந்தாரா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
 

;