tamilnadu

img

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு....

சென்னை:
திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாயன்று (மே 4) மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஐ. பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். அப்போது திமுக சட்டமன்ற  உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். திமுக முன்னணி தலைவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆளுநருடன் சந்திப்பு
திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்துடன் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை  சந்தித்துப்பேச உள்ளார். அப்போது அந்த கடிதத்தை ஆளுநரிடம் அளித்து புதிய அரசு அமைக்க தம்மை அழைக்குமாறு உரிமை கோருவார். ஆளுநர் முறைப்படி அரசமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பார். ஆளுநர் அழைப்பு விடுத்தவுடன் புதிய அரசு பதவியேற்கும்.

நாளை மறுநாள் பதவி ஏற்பு
வெள்ளிக்கிழமை (மே 7)  ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பதவி ஏற்பு விழா எளிமையாகநடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

;