tamilnadu

img

விடுதலைப் போராட்டமும்... அமெரிக்கன் கல்லூரியும்

தோழர் “சங்கரய்யாவின் போராட்டக் குணம் மிக்க வாழ்க்கையை இந்த நூற்றாண்டு மட்டுமல்ல; மனித சமூகம் உள்ளவரை பேசிக்கொண்டேயிருக்கும். ஒரு நாணயத்திற்கு இருபக்கம் போல் கல்லூரிக் காலத்தில் விடுதலைப் போராட்டத்தையும், சங்க இலக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் அரும்பங்காற்றினார். சங்கரய்யா படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மட்டும் விடுதலைப் போராட்டத்தின் போது 142 பேர் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் மட்டும் இவ்வளவு மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம் உண்டு. இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்க மிஷனரிகளுக்கும் எப்போதும் முரண்பாடு உண்டு. இந்த முரண்பாடு காவல்துறையிலும் இருந்தது.

இங்கிலாந்து காவல்துறை அமெரிக்கன் கல்லூரிக்குள் செல்ல மறுத்துவிட்டது. இதனால் அங்கு ஏராளமானோர் விடுதலைப் போரில் பங்கேற்க வாய்ப்பு அமைந்தது. விடுதலைப் போராட்டத்தில் எந்தளவிற்கு சங்கரய்யா ஈடுபாடு கொண்டிருந்தாரோ அந்தளவிற்கு சங்க இலக்கியங்களைப் பாதுகாப்பதிலும், மொழியைப் பாதுகாப்பதிலும் உறுதியாக இருந்தார். சங்க இலக்கியம் கம்யூனிஸ்ட்டுகளின் சொத்து; அதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் படிக்க வேண்டுமென முழங்கினார். 1945-50-ஆம் ஆண்டு காலத்தில் மதுரை வைகையாற்றின் நடுவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதில் பி.சி.ஜோஷி, பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களது உரையைக் கேட்க கிட்டத்தட்ட 24 ஆயிரம் மாட்டு வண்டிகளில் மக்கள் வந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் வந்திருப்பர் என காவல்துறை அன்றைக்கு தெரிவித்துள்ளது. அன்றைக்கு ஏற்பட்ட எழுச்சிப் போராட்டம் இன்றும் நம் நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கிறது. அந்த தியாக வரலாறு இடைவிடாமல் நமக்கு புதுத்தெம்பை அளிக்கிறது. - மதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய சங்கரய்யா நூற்றாண்டு விழாவில் சு.வெங்கடேசன் எம்.பி., ஆற்றிய உரையில் இருந்து.

;