tamilnadu

img

தமிழகத்தில் ஏப்ரல் 6 ல் சட்டப்பேரவை தேர்தல்

புதுதில்லி,பிப்.26-
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல்  ஓரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  அறிவித்துள்ளார்.
தமிழகம், கேரளம், மேற்குவங்கம், அசாம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்தேதியை இன்று தில்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 22ஆம் தேதியும்,  புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 4ஆம் தேதியும், கேரள மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடனும், அசாம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 23ஆம் தேதியும்,  மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 26ஆம் தேதியுடனும் நிறைவு பெற உள்ளது.
இதையடுத்து,  அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை  நடத்துவது தொடர்பாக  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்ரா, ராஜிவ் குமார் ஆகியோர் இன்று தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். 
80 வயதுக்கு மேற்பட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவர். 5 மாநிலங்களில் 824 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 2.7 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்படும். 18கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
குறிப்பாக தமிழகத்தில் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். புதுச்சேரியில் 1559 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். புதுச்சேரியில்  வேட்பாளருக்கான  தேர்தல் செலவு 22 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற 4 மாநிலங்களில் 30.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
தமிழக சட்ட தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் பார்வையாளராக, தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு செலவின பார்வையாளர்களாக  மது மாகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் 12 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 19 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை மார்ச் 20 அன்று நடைபெறும். வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள் மார்ச் 22. ஏப்ரல் 6ம் தேதி ஓரே கட்டமாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும்.  தமிழகத்தை பின்பற்றி அதே தேதிகளில் பாண்டிச்சேரியிலும் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் வாங்கும் தேதி மற்றும் தேர்தலும் ஓரே நடைபெறும் என்று தெரிவித்தார். 
கேரளம் 
கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 3 அன்று துவங்குகிறது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20 அன்று நடைபெறுகிறது. வேட்பு மனு வாபஸ் வாங்க மார்ச் 22. தேர்தல் மார்ச் 6 அன்று ஓரே கட்டமாக நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  தெரிவித்தார்.

;