tamilnadu

img

மாணவர்களை குலத் தொழிலை செய்ய வற்புறுத்தும் கிரண்பேடி.... தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்....

சென்னை:
குலத் தொழிலை செய்ய மாணவர்களை வற்புறுத்தும் புதுச்சேரி துணை நிலை ஆளுனர்  கிரண் பேடிக்கு தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு கண்டனம்தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மாநிலப் பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. கடந்த 25.01.2021 அன்று “ பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை வளரச் செய்தல்”என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுடனான காணொலி நிகழ்ச்சி புதுச்சேரி யூனியன்பிரதேச துணைநிலை ஆளுநர் முன்னெடுப்பில்நடந்தது. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் கிரண் பேடி. 

தாய், தந்தை தொழிலை செய்யுங்கள்
இதில் ஒரு குழந்தை “எங்களுக்கு போதுமான செயல்வழி கல்வி இல்லை, மனப்பாடமாகவே இருக்கிறது, இந்நிலை மாறுமா” என கேட்க, அக்கேள்விக்கு பதில் அளித்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி , “செயல்வழி கற்றலுக்கு வரவிருக்கிற புதிய கல்விக்கொள்கை அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறது. அது நடைமுறைக்குள் வருவதற்கு காத்திராமல் உங்கள் தாய், தந்தையர் செய்யும் தொழிலில் நீங்கள் பயிற்சி எடுங்கள், பிறருக்கு உதவுங்கள் என கூறினார்.புதிய கல்விக் கொள்கையில் மறைமுகமாக சொல்லப்பட்ட குலத்தொழில் கொள்கையை இப்போது கிரண் பேடி மீண்டும் மொழிந்திருக்கிறார்.ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் மோசடி சனாதனகொள்கையையே இவரும் பேசியிருக்கிறார்.

முதல் முறையல்ல
துணைநிலை ஆளுநரின் இக்கூற்று அநீதியானது. அரசு பல தொழில்களுக்கும் பல திறன்களுக்கும், செயல்வழி கற்றலுக்கும் இன்னென்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதுதான் பதிலாக இருக்க முடியுமே தவிர, செயல்வழி கற்றலுக்கு தாய், தந்தைதொழிலில் பயிற்சி எடுங்கள் என சொல்வது மறைமுகமாக முற்போக்கான சமூகம் ஒதுக்கிவிட்ட குலத்தொழிலை மீண்டும் பரிந்துரைப்பது போலாகிறது. இது கண்டிக்கத்தக்கது. மேலும், கிரண் பேடிக்கு இது முதல்முறையல்ல. கிராமப்புறங்கள் தான் தூய்மை அற்றதாக இருக்கிறது. தூய்மையைக் கடைப்பிடிக்காவிடில் அரிசி நிறுத்தப்படும் என்றும் மற்றொரு முறை குற்றப்பரம்பரை என கேலிபேசியும் அப்பேச்சுக்கள் சர்ச்சைக்குள்ளானது. இவரது அத்தனை அபத்தமான அநீதியான பேச்சுக்களுக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொரோனா காலம் முடிந்துபள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவோ, ஒரு ரூபாய் பேருந்துவிடுவதற்கோ ஆளுநர் வாய் திறக்கவே இல்லை.

அமைச்சர் தர்ணா
மேலும் மாநிலத்தின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பலநாட்கள் ஆளுநர் மாளிகை வாயிலில் தர்ணா இருந்தே ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான கல்விஊக்கத்தொகையினை பெற வேண்டிய அவல நிலை உள்ளது. அந்த கோப்பில் உடனடியாக கையெழுத்திட ஆளுநருக்கு மனம் வந்துவிடவில்லை. இன்று வரை தலித் மற்றும்பழங்குடி மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளியின் கட்டுமானம் நடத்தப்படவில்லை. அது குறித்து ஆளுநருக்கு ஒருகருத்தும் இல்லை. மேலும், தலித் பழங்குடியின திருமண உதவித் திட்டத்தின் கோப்பு இதுவரை கையெழுத்திடாமல் ஆளுநரால் இழுத்தடிக்கப்படுகிறது. இதுவரை ஒரு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியோ அல்லது தொகுப்பு வீடுகளையோ ஆளுநர் பார்வையிட்டதே இல்லை. அங்கிருக்கும் அவல நிலைகள் குறித்து யாதொரு அக்கறையும் இவருக்கு இல்லை.

இவ்வாறிருக்க, தொடர்ந்து ஆதிதிராவிடர் பழங்குடி மாணவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக குலத்தொழிலை ஆதரித்தபடி இருக்கும் துணைநிலை ஆளுநரின் இந்த பேச்சினை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடுமையாக கண்டிக்கிறது. மேலும் ஆளுநர் இனியும் காலதாமதம் செய்யாமல் இப்பேச்சிற்கு பொது மன்னிப்புக் கோர வேண்டும். மேலும் துணைநிலை ஆளுநரின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு ஜனநாயக அமைப்புகள், முற்போக்கு சக்திகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;