சென்னை,டிச.22- தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளன்று, தேசிய அளவிலான யூஜிசி நெட் தேர்வு நடைபெறும் என அறிவித்து, தனது வஞ்சிப்பு நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்
அக்கடிதத்தில், “அண்மையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட யூஜிசி - நெட் தேர்வு அட்டவணையில், நெட் தேர்வு ஜனவரி 3 தொடங்கி, ஜனவரி 16 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் அடையாளத் திருநாளை கொண்டாட இடையூறாக அமைந்துள்ளது. குறிப்பாக மக்களின் பண்பாட்டு உரிமையை சிதைக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. எனவே, ஜனவரி 15, 16 நாட்களில் நடைபெறுவதாக அறிவித்த தேர்வுகளை நாள் மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்